பக்கம் : 1009 | | (இ - ள்.) குடங்கையின் அகன்று - உள்ளங்கையின் அளவிற்றாய் விரிந்து, நீண்டு - நீளிதாய், குவளையின் பிணையல் செற்று - நீலோற்பல மாலையைச் சினந்து, மடங்களி மதர்வைச் செங்கண் - மடப்பத்தோடு களித்த சிவந்த கண்களையுடைய, மான்பிணை மருட்டி - பெண்மானை அச்சுறுத்தி, மையால் - மையூட்டப் பெற்றமையால், புடங்கலந்து இருள் பட்டு - பக்க மெங்கும் பரவி இருளச்செய்து, உள்ளால் - அகத்தே, செவ்வரி பொதிந்த வாள்கண் - செவ்விய வரிகள் படர்ந்த வாள்போலும் கண்களை உடைய, இடங்கழி மகளிர் - காமமிகுதியை உடைய மகளிர்கள், சூழ - தன்னைச் சூழ்ந்துமொய்க்க, இந்திரன் இருந்தது ஒத்தான் - தேவேந்திரன் வீற்றிருந்ததை ஒத்து விளங்கினான், (எ - று.) அகன்று, நீண்டு, பிணையல் செற்று. பிணைமருட்டி, இருள்பட்டு, உள்ளாற் செவ்வரி பொதிந்த வாட்கண், மகளிர் சூழ இருந்த நம்பி, இந்திரன் அரம்பையர் சூழ இருந்ததனை ஒத்தான் என்க. இடங்கழி - கழிபெருங் காமம். மடங்களி மதர்வைச் செங்கண் என்பன மான்பிணைக்கு அடை மொழிகள். பிணையல் செற்று பிணைமருட்டி இருள்பட்டுப் பொதிந்த வாட்கண் என்க. புடம் - பக்கம். | (495) | | | 1626. | ஆங்கவ ரோடு மற்ற வணிபொழிற் கரச னாய பாங்கமை பாரி சாதம் பருவஞ்செய் பொலிவு நோக்கி ஈங்கிவற் கிசைந்த கோல மினிதினி னியற்று கென்றான் ஓங்கிய வுருவத் தார்மே லொளிநிலா வுமிழும் பூணான். | (இ - ள்.) ஆங்கு அவரோடு - அவ்விடத்தே அம்மகளிரோடே சென்று, அ அணிபொழிற்கு - அந்த அழகிய பூம்பொழிலுக்கு, அரசன் ஆய - வேந்தனாகிய, பாங்கு அமை பாரிசாதம் - எழில்மிக்க அப்பாரிசாத மரம், பருவம் செய் பொலிவு நோக்கி - அரும்பும் பருவமாகிய மணப்பருவ மடைந்துள்ள அழகினை விரும்பிப் பார்த்து, ஈங்கு இவற்கு - இவ்விடத்தே இம்மணமகனுக்கு, இசைந்த கோலம் - பொருந்திய ஒப்பனையை, இனிதினின் - இனிமையுடையதாக, இயற்றுக - செய்வீர்களாக, என்றான் - என்று பணித்தான், ஓங்கிய உருவத்தார் மேல் - மிக்க எழிலையுடைய மலர்ப்பூந் தொடையலின் மிசை, ஒளி நிலா உமிழும் பூணான் - ஒளியாகிய நிலவினைப் பரப்புகின்ற அணிகலனுடைய திவிட்டநம்பி, (எ - று.) அம்மகளிரோடே நம்பி சென்று, பாரிசாதத்தின் பருவஞ் செய்பொலிவு நோக்கி, இம்மணமகனுக்கேற்ற ஒப்பனை செய்க எனப் பணித்தான் என்க. | (496) |
| | | |
|
|