பக்கம் : 1010 | | பாரிசாதமணமகனை ஒப்பனை செய்தல் | 1627. | எந்திர மிழிந்த தாரை யருவிநீ ரினிதி னாட்டிக் கந்தெனத் திரண்ட திண்டோட் கனகசா லங்கள் காட்டிப் பைந்தழைப் பொழிலுக் கெல்லா மரசெனப் பட்டஞ் சேர்த்தி அந்தளிர்க் கொம்பர் தோறு மணிபல 1வணிந்தா ரன்றே. | (இ - ள்.) எந்திரம் இழிந்த தாரை அருவிநீர் இனிதின் ஆட்டி - நீர்விசிறும் பொறியாலே இறங்குதலையுடைய தாரையாகிய அருவியினுடைய நீராலே அப்பாரிசாத மணமகனை இனிதாக நீராட்டி, கந்து எனத் திரண்ட திண்டோள் - தூண்களைப்போலத் திரண்டுள்ள கிளைகளாகிய திண்ணிய தோள்களிடத்தே, கனகசாலங்கள் - பொன்னாலாய அணிகலன்களை, காட்டி - அணிந்து, பைந்தழைப் பொழிலுக்கு எல்லாம் அரசு - பசிய தழைகளை யுடைய பூம்பொழில்கள் எல்லாவற்றிற்கும் இப்பாரிசாதம் அரசனாகும், எனப் பட்டம் சேர்த்தி - என்று ஒரு பட்டத்தையும் சூட்டி, அந்தளிர்க் கொம்பர் தோறும் - அழகிய தளிர்கள் நிறைந்த கொம்புகளில் எல்லாம், அணிபல அணிந்தார் அன்றே - அணிகலங்கள் பலவற்றையும் சூட்டினார், (எ - று.) எந்திரம் - நீர்வீசும் இயந்திரம் எனினுமாம். நம்பியின் பணிபெற்ற மகளிர் அப்பாரிசாதத்தைச் சிவிறித் தாரையாலே அருவி நீராட்டிக் கிளைகளிலே பொன்னணிகலன் பூட்டிப், பொழிலுக் கெல்லாம் அரசு எனப் பட்டம் சூட்டிக், கொம்பர்தோறும் அணிகலன் அணிந்தனர் என்க. | (497) | | காமவல்லி மணமகளை ஒப்பனை செய்தல் | 1628. | கன்னியங் காம வல்லிக் கனங்குழை மடந்தை தன்னை மன்னவன் றேவி மார்கண் மணவினைக் கோலஞ் செய்து பின்னத னோடு சேர்த்திப் பெருகிய களிய ரானார் இன்னகைப் புதல்வர் செல்வம் யாவரே யினிதென் னாதார். | (இ - ள்.) கன்னி அம் காமவல்லி - கன்னிமையுடைய அழகிய காமவல்லி என்னும், கனங்குழை - கனவிய குழையினையுடைய, மடந்தை தன்னை - நங்கையை, மன்னவன் தேவிமார்கள் - திவிட்டனுடைய மனைவிமார்கள், மணவினைக் கோலம்செய்து - திருமணவினைக்குரிய ஒப்பனை பலவும் செய்து, பின் அதனோடு சேர்த்தி - பின்னர் அப்பாரிசாத மணமகனோடு கூட்டி, பெருகிய களியர் ஆனார் - மிக்க மகிழ்ச்சியுடையர் ஆயினார், இன் நகை புதல்வர் செல்வம் - இனிய முறுவலையுடைய மகார்கள் செல்வம் எய்துதலை, யாவரே இனிது என்னாதார் - யார் தாம் இனிதாகக் கருதாதார் உளர், (எ - று.) | |
| (பாடம்) 1 வணிவித்தானே. | | |
|
|