பக்கம் : 1012
 

     (இ - ள்.) பொன் அவிர் குழையினாரை - பொன்னாலாய ஒளிருகின்ற தோடுகள்
அணிந்த மகளிரை, பொழில் விளையாடல் ஏவி - அப்பொழிலில் விளையாடும் தொழிலிலே
செலுத்தி, மன்னவன் - திவிட்டன், மதலை மாட வளநகர் அணுகுவான் போல் - மதலை
மாடங்களையுடைய வளவிய நகரத்திலே புகுதப் போவானைப் போன்று காட்டி,
தன்னைமெய் மறைத்தோர் விஞ்சை - தன் திருமேனியை மறைத்துக்கொண்டு ஒரு
வித்தையே, தாழ் இருள் எழினியாக - தங்கிய இருளைச் செய்யும் திரைச்சீலையாகக்
கொண்டு, பின்னை - அங்ஙனம் மறைத்துக் கொண்ட பின்னர், மாதவனும் தானும் -
விதூடகனும் தானுமாக, பிணை அனார் உழையன் ஆனான் - மான்பிணையை ஒத்த
அம்மகளிரின் மருங்கே எய்தினான், (எ - று.)

     மன்னவன் குழையினாரை விளையாட ஏவி, மதலை மாடம் புகுவான் போன்று
காட்டி, வித்தையைத் தன்னையும், விதூடகனையும் மறையக் கொள்ளும், திரையாகக்
கொண்டு, மீட்டும் அம்மகளிர் மருங்கு வேதியனுடன் எய்தினான் என்க.
வித்தை தம்முடன் மறைத்தன் மாத்திரை திரைக்கு உவமை என்க. இது தொழிலுவமை.

(500)

 

மகளிர் விளையாட்டிற் புகுதல்

1631. மன்னவன் மறைந்த தெண்ணி
     மாபெருந் தேவி மற்றப்
பொன்னவிர் 1கொடியன்னாரைப்
     பொழில்விளை யாட 2லேவக்
கன்னியங் கோலஞ் செய்து
     கதிர்மணிக் கலங்க டாங்கி
இன்னகை மழலை தோற்றி
     யிளையவ 3ரினைய ரானார்.
 
     (இ - ள்.) மன்னவன் மறைந்தது எண்ணி - திவிட்டன் அவணின்றும் மறைந்து
சென்றமையைக் கருதி, மாபெருந்தேவி - கோப்பெருந்தேவியாகிய சுயம்பிரபை, மற்று அப்
பொன் அவிர் கொடியன்னாரை - அந்தப் பொன்னங்கொடி போன்று திகழும் மகளிரை,
பொழில் விளையாடல் ஏவ - பொழில் விளையாட்டிலே செலுத்த, கன்னி அம்கோலம்
செய்து - கன்னியரைப்போன்று அழகிய ஒப்பனை செய்தவராய், கதிர்மணிக்கலங்கள் தாங்கி
- சுடருடைய மணியாலாய அணிகலன்களை அணிந்தவராய், இன் நகை மழலை தோற்றி -
புன் முறுவலோடே மழலைமொழிகளை மிழற்றுபவராய், இளையவர் - இளமை மிக்க
அம்மகளிர்கள், இனையர் ஆனார் - இத்தகையர் ஆயினர், (எ - று.)

     நம்பி மறைந்தமை கருதி நங்கை கொடி யன்னாரைப் பொழில் விளையாட்டில் ஏவ
அவரும் கன்னியர் கோலஞ்செய்து கலங்கள் தாங்கி மழலைதோற்றி இத்தகையராயினர்
என்க. இனையர் என்றது இனிவருமாறு செய்பவர் என்றபடி.

 (501)

 

     (பாடம்) 1 கொடியி. 2லேவி. 3 ரிளைய.