பக்கம் : 1015 | | பறப்பை - பறவை. பாவை முதலிய வடிவினவாகப் புனைந்து பெருந்தேவியின் சிகையிலே சூட்டுவாருமாய் என்க. | (504) | | 1635. | அருமலர்த் தழையும் போது மடியுறை யாக வேந்திக் திருமலர்ப் பாவை யன்ன தேவியைச் செவ்வி காண்பார் உருமல ரிழைத்த பாவை யொளிமண நயந்து மாதோ குருமலர்க் கொம்பி னொல்கிக் குரவையின் 1மயங்கு வாரும். | (இ - ள்.) அருமலர் போதும் தழையும் அடியுறையாக ஏந்தி - மலர்ந்த அரிய மலர்களையும் தழைகளையும் அடிக்காணிக்கையாகக்கொண்டு, திருமலர்ப்பாவை அன்ன தேவியை - அழகிய செந்தாமரை மலரிலே வீற்றிருக்கும் திருமகளை ஒத்த சுயம்பிரபையை, செவ்வி காண்பார் - அமயமறிந்து கண்டுமகிழ்வாரும், உருமலர் இழைத்த பாவை - அழகிய மலராலே இயற்றிய பதுமையின், ஒளி மணம் நயந்து - ஒளியையும் நறுமணத்தையும் விரும்பியவராய், (மாதோ) குருமலர்க் கொம்பின் ஒல்கி - நிறமமைந்த பூங்கொம்புபோலத் துவண்டு, குரவையின் மயங்கி நிற்பார் - குரவைக் கூத்தின்கட் பொருந்துவாரும், (எ - று.) தழையும் போதும் அடியுறையாக ஏந்தித் தேவியைச் செவ்வி காண்பாரும் மலராலிழைத்த பாவையின் ஒளியையும் மணத்தையும் நயந்து ஒல்கிக் குரவைக் கூத்தாடுவாருமாய் என்க. | (505) | | 1636. | சிகரமா யிலங்கு சென்னித் தென்மலைச் சாந்து மூழ்கிப் பகருமா மணிவண் டோவாப் பணைமுலைப் பாரந் தாங்கித் தகரவார் குழல்பின் றாழத் தாழ்குழை திருவில் 2வீச மகரயா ழெழுவி மன்னன் வண்புகழ் பாடுவாரும். | (இ - ள்.) சிகரமாய் இலங்கு சென்னி தென்மலைச்சாந்து மூழ்கி - கொடுமுடிகளை உடைத்தாய்த் திகழாநின்ற தலையை உடைய பொதிய மலையிலே உண்டாகும் சந்தனக் குழம்பிலே முழுகி, பகரும் மா மணி வண்டு ஓவா - இசைபாடுகின்ற கரிய மணி போன்ற வண்டுகள் அகலாத, பணைமுலை பாரந்தாங்கி - பருத்த முலையாகிய சுமையைத் தாங்கிக் கொண்டு, தகரவார் குழல் பின் தாழ - மயிர்ச்சாந்தம் நீவிய நீண்ட கூந்தல் பின்புறத்தே தாழ்ந்துகிடப்ப, தாழ்குழை - தூங்குகின்ற தோடுகள், திருவில் வீச - அழகிய ஒளியைப் பரப்ப, மகரயாழ் எழுவி - மகரயாழை வருடி இன்இசை எழீஇ, மன்னன் வண்புகழ் - திவிட்டனது வளமிக்க புகழை, பாடுவாரும் - இசைப்பாட்டிலே இயைத்துப் பாடுவாரும், (எ - று.) | |
| (பாடம்) 1 மயங்கி நிற்பார். 2 வீசி | | |
|
|