பக்கம் : 1019
 

 

1641. மயிலுடை யாடல் கண்டு
     மகிழ்ந்துமெய்ம் மயங்கி நிற்பார்
குயிலொடு மாறு கொள்வார்
     குழைமுகஞ் சுடரக் கோட்டிக்
கயிலொடு குழல்பின் றாழக்
     கண்டுநீர் கொண்மி னென்றாங்
கயிலிடைப் பகழி வாட்க
     ணங்கையின் மறைத்து நிற்பார்.
 
     (இ - ள்.) மயிலுடை ஆடல்கண்டு மகிழ்ந்து மெய்மயங்கி நிற்பார் - மயில்கள்
ஆடுதலைக்கண்டு மகிழ்ந்து மெய்மறந்து நிற்பாரும், குயிலொடு மாறு கொள்வார் -
குயில்கூவ அவற்றெதிர் தாமும் அக்குயில் போன்று கூவுவாரும், குழை முகம் சுடரக்
கோட்டி - தோடுகள் முகத்திலே சென்று மிளிரும்படி குனிந்து, கயிலொடு குழல் பின் தாழ
- எருத்தோடு பொருந்துமாறு கூந்தல் பின்புறத்தே சரிய, நீர் கண்டு கொண்மின் -
தோழியீரே நீயிர் எம்மைக் கண்டுகொண்மின்கள் என்று கூறி, ஆங்கு - அவ்விடத்தே,
அயில் பகழி வாள் இடை கண் - வேலும் அம்பும் வாளும் தோற்கும் தம் கண்களை,
அங்கையின் - தம் அழகிய கையாலே, மறைத்து நிற்பார் - புதைத்து நிற்பாரும், (எ - று.)

     இப் பேதையர், தம் கண்களைத் தாமே புதைத்த மாத்திரையில் தாம் யாருமறியாதபடி
ஒளிந்து கொண்டதாய்க் கருதித் தம் தோழியரைத் தம்மைக் கண்டுபிடிக்கும்படி கூறுகிறார்
என்க. பாலைநிலத்தே தன் தலையை மட்டும் புதரிலே மறைத்துத் தன்னை யாரும்
காணதவாறு மறைத்து கொண்டதாய்க் கருதும் தீக்கோழியை ஒப்பார் இவர்.

     இனித் தோழியர் கண்ணைத் தங் கையாற் பொத்தி எம்மைக் கண்டு கொண்மின்
என்றார் எனினுமாம். இவ் விளையாட்டைக் கண்ணாமூச்சி என்பார்.

 (511)

 
 
1642. செழுமலர்த் தாது கொய்து
     மெல்விரல் சிவந்த வென்பார்
விழுமலர்த் துகள்வந் தூன்ற
     மெல்லடி மெலிந்த வென்பார்
கொழுமலர்ப் பிணைய றாங்கிக்
     கொடியிடை யொசிந்த வென்பார்
எழுமலர்த் தனைய தோளான்
     றேவிய ரினைய ரானார்.