பக்கம் : 1020
 

     (இ - ள்.) செழுந்தாது மலர்கொய்து - செழித்த பூந்தாது பொருந்திய மலர்களைக்
கொய்தமையாலே, மெல்விரல் சிவந்த என்பார் - தம் மெல்லிய விரல்கள் சிவந்தன
என்பாரும், விழும் மலர்துகள் வந்து ஊன்ற - விழுகின்ற மலர்களின் பூந்தாதுகள் வந்து
உறுத்துதலாலே, மெல் அடி - எம் மெல்லிய அடிகள், மெலிந்த என்பார் - வருந்தின
என்பாரும், கொழுமலர்ப்பிணையல் தாங்கி - கொழுவிய மலர் மாலையைச்
சுமந்தமையாலே, கொடியிடை ஒசிந்த தென்பார் - எம்கொடி போன்ற நுசுப்பு
வருந்திற்றென்பாரும், எழுமலர்த்து அனைய தோளான் - தூணைத் திரட்டியதனைய
தோளையுடைய திவிட்டனின், தேவியர் - மனைவிமார்கள், இனையர் ஆனார் -
இத்தன்மையினர் ஆயினர், (எ - று.)

     “அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாத
     ரடிக்கு நெருஞ்சிப் பழம்“ (திருக் - செய் - 1120.)

     மலர் கொய்து மெல்விரல் சிவந்தன என்பாரும், பூந்துகள் உறுத்தி மெல்லடி மெலிந்த
என்பாரும், பிணையல் தாங்கி இடைஒசிந்த என்பாரும், நம்பியின் தேவியர்
இத்தகையராயினர் என்க. இது தேவியரின் மென்மை கூறிற்று.

(512)

 

வேறு

1643. கொடிமருங்கு றாமே கொடியாய் நுடங்க
வடிநெடுங்க ணோக்க மணிவண்டா யோட
அடிமலருங் கைத்தலமு 1மந்தளிராய்த் தோன்றக்
கடிநறும்பூஞ் சோலையைக் காரிகையார் வென்றார்.
 
     (இ - ள்.) கொடிமருங்குல் தாமே - மின்னற்கொடி போன்ற தம் நுண்ணிடைகளே,
கொடியாய் நுடங்க - அப் பொழிலிலுள்ள பூங்கொடிகளாகி அசைய, வடி நெடுங்கண்
நோக்கம் - மாவடுவின் பிளவினை ஒத்த நீண்ட கண்களின் பார்வைகள், மணிவண்டாய்
ஓட - அழகிய வண்டுகளாகிச் செல்ல, மலர் அடியும் கைத்தலமும் - மலர் போன்ற
அடிகளும் கைகளுமே, அந்தளிராய்த் தோன்ற - அழகிய தளிர்களாகத் தோன்ற
(இவ்வாற்றால்,) கடிநறும் பூஞ்சோலையை - காவலமைந்த நறிய மணங்கமழும் அப்பூம்
பொழிலை, காரிகையார்-அவ்வழகிய மகளிர்கள், வென்றார்-வென்றனர், (எ-று.)

     மகளிர் தம் மிடையாகிய கொடிகள் நுடங்கவும் கண்ணாகிய வண்டுகள் ஓடவும்
அடியும் கையும் தளிராய்த் தோன்றவும் இவையிற்றின் அழகுமிகுதியானே, கொடியையும்
வண்டுகளையும் தளிரையும் உடைய பொழிலை வென்றனர் என்க.

(513)

   


     (பாடம்) 1 மைந்தளிராய்த், மாந்தளிராய்.