(இ - ள்.) அரையிலங்கும் மேகலை ஆர்ப்பின் - இடையிலே யாத்த மணிமேகலை ஒலிக்குமாயின், அயல இலங்குவரை - பக்கலிலே திகழ்வன வாகிய மலைகள், மேகலை மாறே நின்று ஆர்க்கும் - அம் மணிமேகலை ஒலிக்கு எதிர் ஒலிசெய்து நின்று ஒலிக்கும், புரை இலங்கு பொன் சிலம்புதான் சிலம்பும் போழ்தில் - உட்டுளையுடன் விளங்குகின்ற பொன்னாலாய மகளிர் காலணியாகிய சிலம்புகள் முழங்கும்பொழுது, நிரை இலங்கு பொன் சிலம்பு - நிரலாகத் திகழாநின்ற பொன்னாலாய செய் குன்றங்கள், நேரே -அம்முழக்கிற்கு எதிராக, சிலம்பும் - முழங்கும், (எ - று.) புரை - உயர்வுமாம். மேகலை முழங்குங்கால் அவ்வரை எதிர் ஒலிசெய்யும் சிலம்பு ஒலிக்குங்கால் அச் செய்குன்றம் எதிரொலி செய்யும் என்க. |
(இ - ள்.) செங்கண் நெடியான் - சிவந்த கண்களையுடைய நெடுமாலாகிய திவிட்ட நம்பியின், கடிகாவில் - மணமிக்க பூம்பொழிலின் கண் உள்ள, செய்குன்றே - செய்குன்று, கொங்கு உண் குழலார் - நறுமணம் ஊட்டப்பெற்ற அளகத்தையுடைய மகளிர்கள், குழல்ஏர் மணிமழலை - வேய்ங்குழலிசைபோன்ற அழகிய முத்துமுத்தாய் மிழற்றுகின்ற மழலை மொழிகள், தங்கின் - தோன்றுமிடத்தே, அவைகொண்டு - அம்மொழியைத் தான் ஏற்றுக்கொண்டு, தானும் எதிர் மிழற்றும் - தானும் அம்மழலை மொழிகளை எதிரொலியாக மிழற்றா நிற்கும், ஆதலின், அங் கணவர் செய்வ செய்து - அழகிய கண்களையுடைய அம்மகளிர் செய்யும் செயல்களைத் தானும் செய்வதாய், அசதியாடின்று - அசதியாடிற்று. |