(இ - ள்.) விண்டுசுடர் தயங்கு மேதகு மாணிக்கம் கண்டு - வெளிப் பட்டு ஒளிதிகழ்கின்ற மேன்மைமிக்க மாணிக்கமணியினைப் பார்த்து, கவின் விரிந்த காயாந்துணர் - அழகு விரிந்த காயாவின் பூங்கொத்துக்கள் என்று கருதி, இவைகொண்டு குழற்கு அணிதும் என்று - இவையிற்றைக் கொய்து எம் கூந்தலிலே சூடுவேம் என்று எண்ணி, கொளல் உறுவார் - அவையிற்றைக் கொய்பவர், வண்டு வழிபடர - முன்னரே அவையிற்றை அவ்வாறு கருதி ஆண்டு மொய்த்துள்ள வண்டுகள் அவையிற்றைவிட்டு அம்மகளிர் கண்களை மலராகக் கருதிவீழாநிற்ப, வாட்கண் புதைத்து - தம் வாள்போன்ற கண்களைத் தம் கையால் புதைத்தனராய், இயல்வார் - புறம்போகா நிற்பர், (எ - று.) மாணிக்கச் சுடர்கண்டு, இவை காயாவின் பூந்துணர் என்று, கொய்து சூட்டக் கை நீட்டியவழி, அவற்றில் மொய்த்த வண்டு தேவியர் கண்ணை மலரெனக் கருதி வந்து வீழ்தலாலே, வாட்கண் புதைத்தனராய்ப் புறம் போவார், என்க. |
(இ - ள்.) வேய் ஓங்கு சாரல் - மூங்கில்கள் ஓங்கி வளராநின்ற மலைச்சாரலிலே, விளைபுனம் காவல்கொண்டு - தினை முதலிய விளைந்துள்ள புனங்களைக் காவல்செய்து, ஆயோ என மொழியும் - கிளிகடியும் மகளிர்கள் “ஆயோ“ என்று கூவும், அம்மழலை இன்னிசையால் - அந்த மழலையுடைய இனிய குரலாலே, போய் ஓங்கு பூஞ்சோலை வாழும் புனக்கிளிகள் - வெருவிப்போய் அப்பூம்பொழிலிலே வாழும் அத்தினைப்புனக்கிளிகளை, மாயோன் மடந்தைமார் - திருமாலாகிய திவிட்ட நம்பியின் தேவிமார்கள், கூவி - தாமும் ஆயோ எனக் கூவி, மகிழ்விப்பார் - அக்கிளிகளை மகிழும்படி செய்வர், (எ - று.) கிள்ளைகள் ஈண்டும் தினைப்புனம் உண்டு போலும் என்று மகிழ்ந்தன என்க. தேவியர் ஆயோ எனக் கூவிப் புனக்கிளிகளை மகிழ்விப்பர் என்க. |