பக்கம் : 1029
 

     (இ - ள்.) பூந்தளிர் தாழ்ந்த பொழில் தயங்கு பொன்வரைவாய் - அழகிய தளிர்கள்
தழைத்துத் தாழ்ந்த அப்பூம்பொழிலின்கண் உள்ள பொன்னாலாய செய்குன்றத்தில்,
ஈர்ந்தளிர்மேனியார் - நெய்ப்புடைய தளிர்போன்ற திருமேனியையுடைய அவ்வெழில்
மகளிர்கள், இவ்வாறு இனிது இயல - இவ்வாறு இன்புற்று ஆடாநிற்ப, காந்தள்
அங்குன்றின் - கோடல்கள் தழைத்த அழகிய மற்றொரு மலையில், கனபொன் மணியறை
மேல் - கனவிய பொன்னும் மணியும் நிறைந்த பாறையிடத்தே, ஏந்திளங்கொங்கை உயர்ந்து
இளையவாகிய முலைகளையுடைய, மகளிர் சிலர் இயைந்தார் - மகளிர்கள் சிலர் எய்தினர்,
(எ - று.)

     தேவியர் இவ்வாறு பொழிலாட்டயரா நின்ற பொழுது அவருட் சிலர், ஒரு குன்றின்
உச்சியிலே சென்றனர் என்க.

(528)

 

அம்மனையும் வள்ளையும் ஆடுதல்

1659. பைம்பொ 1னறைமேற் பவழ முரலாக
வம்ப மணிபெய்து வான்கேழ் மருப்போச்சி
அம்பொன் மலைசிலம்ப வம்மனை 2வள்ளையு
கம்பஞ்செய் யானைக் கரியவனைப் பாடினார்.
 
     (இ - ள்.) பைம்பொன் அறைமேல் - பசிய அப்பொன் பாறையின் மேலே, பவழம்
உரலாக - பவழத்தாலியன்ற உரலிலே, வம்ப மணி பெய்து - புதிய மணிகளைச் செந்நெலாகப் பெய்து, வான் கேழ் மருப்பு ஓச்சி - தூய வெண்ணிறமமைந்த யானைக்
கோடாகிய உலக்கைகளாலே குற்று, அம்பொன் மலை சிலம்ப - அழகிய அப்பொன்மலை
எதிரொலி எடுப்ப, அம்மனை வள்ளையுடன் அம்மனைப்பாடலும் வள்ளைப்பாடலும்,
கம்பஞ் செங் யானை கரியவனை - பகைவரை நடுக்கஞ்செய்யும் யானை போல்வானாகிய
திவிட்டநம்பியை, பாடினார் - ஏத்திப் பாடலானார்கள், (எ - று.)

     அம்மனை - அம்மனை எறிந்து மகளிர் ஆடும் ஆடல், வள்ளைப்பாட்டு -
உலக்கைப் பாட்டு.

     அங்ஙனம் சென்ற தேவியர் பவழ உரலிலே மணி அரிசி பெய்து மருப்புலக்கை
ஓச்சிக் கரியவனாகிய நம்பியை அம்மனைப் பாட்டினும் வள்ளைப் பாட்டினும் புகழ்ந்து
பாடுவாராயினர் என்க.

(529)

 

     (பாடம்)1 னறைமேலப். 2 வள்ளையுட்.