பக்கம் : 1033
 

     (இ - ள்.) மடந்தையர் - அம்மகளிர்கள், மயில் கலந்து இரிந்தபோல - மயில்கள்
கூடிக் கெட்டோடினாற் போன்று, கயில் கலந்து இருண்டு தாழ்ந்த கருங்குழல் மருங்கு
சோர - பிடரின்கட் பொருந்தி இருண்டு தூங்குதலை யுடைய கரிய கூந்தல்கள் அவிழ்ந்து
பக்கத்திலே சரியவும், வெயில் கலந்து இலங்கும் செம்பொன்மிடை மணி குழை வில்வீச -
ஒளி பொருந்தித் திகழ்கின்ற செவ்விய பொன்னும் மணியும் செறிய இயற்றிய தோடுகள்
ஒளி காலவும், அயில் கலந்து இலங்குவேல் ஐயரி கண் பிறழ ஓடி - கூர்மை பொருந்தித்
திகழ்கின்ற வேல் போலும் அழகிய வரிபரந்த கண்கள் பிறழவும் அஞ்சி ஓடி, நடுங்கினர் -
அஞ்சி நடுங்கினர், ஏ : அசை, (எ - று.)

     குழல் சோரவும் வில்வீசவும் பிறழவும் மயில்கள் கூடி ஓடுவன போன்று மகளிர்கள்
அவ்வியானையைக் கண்டு அஞ்சி ஓடினர் என்க. கயில் - எருத்து, ஐயரி - அழகிய கோடு,
கலந்து - சேர்ந்து,

(535)

 

சுயம்பிரபை அஞ்சுதலும்
நம்பி தோன்றித் தழீஇக் கோடலும்

1666. நாண்டனா னிறைந்த நங்கை
     நடுங்குபு நுடங்கி நோக்கி
யாண்டையா ரடிக ளென்னு
     மாயிடை யஞ்சல் பொன்னே
ஈண்டையே னென்னை பட்ட
     தென்றுசென் றணுகி 1னானால்
வேண்டிய விளைத்துக் கொள்ளும்
     விழுத்தவம் விளைத்து வந்தான்.
 
     (இ - ள்.) நாண்தனால் நிறைந்த நங்கை - நாண் என்னும் பெண்மைக் குணம்
நிறைந்த சுயம்பிரபை, நடுங்குபு நுடங்கி நோக்கி - அஞ்சி நடுங்கி ஒல்கி நாற்றிசையினும்
பார்த்து, அடிகள் யாண்டையார் என்னும் ஆயிடை - நம்மடிகளார் எவ்விடத்துள்ளார்
என்று கூறும் அப்பொழுதே, அஞ்சல் பொன்னே - அஞ்சேல் திருமகளே,

     ஈண்டையேன் - யான் இவ்விடத்தே தான் உளேன், பட்டது என்னை என்று -
இங்கே என்ன நிகழ்ந்தது என்று வினவியவனாய், சென்று அணுகினான் - அத்தேவிபாற்
சென்றெய்தினான், (அவன் யார் எனில்) வேண்டிய விளைத்துக் கொள்ளும் - தாம்
வேண்டியவற்றை வேண்டியபடி விளைவித்துக் கொள்ளுதற்குக் காரணமான, விழுத்தவம் -
சிறந்த தவத்தினை, விளைத்து வந்தான் - முற்பிறப்பில் ஆற்றி வந்து தோன்றியவனாகிய
திவிட்டன், (எ - று.)
 

     (பாடம்) 1 னானே.