பக்கம் : 1040
 

     (இ - ள்.) சாந்து எழு சிவிறித்தாரை - சந்தனங்கலந்த நீர் எழுகின்ற துருத்தியால்
வீசப்பட்ட நீர்த்தாரைகள், சதுர்முகமாக - நான்கு திக்குகளினும், வீக்கிப் பாய்ந்தன -
விசைத்துந்தப்பட்டு நம்பியின் மேலே பாயாநின்றன, பவழச் செங்கேழ் அங்கையால் -
பவழம் போன்று சிவந்த நிறமுடைய அழகிய தம் கைகளாலே, படுத்தநீர் - பரவுமாறு
வீசப்பட்ட நீர், திவலையாகி - துளிகளாய் வந்து,

     வேய்ந்தன - நம்பியின் திருமேனியை மறைத்தன, வேரி மாலை விழுந்தன - மணம்
பொருந்திய மலர்மாலைகள் நம்பியின் தோள்மேலே வீழாநின்றன, இவ்வாற்றால் செய்த
இப்போரின்கண், நாந்தகக் கிழவன் - வாட்படையுடைய தலைவனாகிய நம்பி,
நங்கைமார்க்கு உடைந்து நின்றான் - அத்தேவிமார்க்குத் தோற்றவனாய் வறிதே நின்றான்,
பொய்யே! - ஒரோவழி தோற்றது பொய்யாயிருக்குங்கொல், (எ - று.)

     நான்கு திசையினின்றும் தாரைவீசி மகளிர் இறைத்த நீர் விழுதலாலும், மாலை
தோண்மிசை வீழ்தலாலும், நம்பி நங்கையர்க்குத் தோற்றான். ஒருகால் தோற்றது
பொய்யாயிருக்குங்கொல் எனத் தேவர் கூறினர் என்க.

 (546)

 
 
1677. காரையார் வண்ணன் மாலைக்
     காற்படை யுடைந்த போழ்தில்
தேரையாய்க் குறளுஞ் சிந்து
     மிதந்தன 1சில்ல சிந்தி
வேரியார் குவளை வேய்ந்த
     மெல்லிய லவர்க்குத் தோற்ற
ஓரையாய் முதலை யாகிக்
     2கூன்படை யொளித்த வன்றே.
 
     (இ - ள்.) காரை ஆர்வண்ணன் - முகிலைப்போன்ற வண்ணமுடைய திவிட்டநம்பி,
மாலை கால்படை - நிரலுடைய காலாட்படைகள், உடைந்த போழ்தில் - தோல்வி
எய்தியவுடனே, சில்ல குறளும் சிந்தும் - சிற்சில குறளர்களும் சிந்தர்களும், தேரையாய்
சிந்தி மிதந்தன - தவளைகளைப் போன்று நீரிலே சிதறி மிதக்கலாயினர், ஓரையாய் -
கூட்டமாகிய, வேரியார் - மணம் பொருந்திய, குவளை வேய்ந்த - நீலோற் பல மலர்
சூடிய, மெல்லியல் அவர்க்கு - தேவிமார்களுக்கு, தோற்ற - தோல்வியுற்ற, கூன்படை -
கூனராகிய படை, ஓரையாய் முதலையாகி ஒளித்த அன்றே - ஓரைகளைப் போன்றும்
முதலைகளைப் போன்றும் நீரிலே மூழ்கி மறைந்து கொண்டனர், (எ - று.)

     ஓரை - ஒருவகைக் கடல்மீன்.

     குறள் சிந்து கூன் முதலிய உருவமுடையோர், உரிமை மகளிர்க்கு ஏவல் செய்யும்
பொருட்டு உளராவர். அவர் இந்நீர் (போரில்) விளையாட்டில், நம்பியின் படைஞராய்
உருவகித்துக் கூறப்பட்டனர். குறளர் சிந்தர் ஆகியோர் தவளைகளைப் போன்று நீரில்
மிதந்தும், கூனர் முதலையைப் போன்றும் ஓரையைப் போன்றும் நீருள் மூழ்கியும்,
விளையாடினர் என்பது கருத்து.

(547)

 
 
1678. வென்றனம் வீரன் றன்னை
     வீக்குமின் சிவிறித் தாரை
சென்றெனச் சிறந்த காதற்
     றேவியர் திளைக்கும் போழ்தில்
ஒன்றிய வுழையர் கீழ்நீ
     3ரோப்பறித் திடுத லோடு
நின்றகஞ் சுழிந்த தெண்ணீர்
     நெரேலென விழிந்த தன்றே.
 
 

     (பாடம்) 1 சிலதுந் துஞ்சி. 2 கூன்மடை. 3 ரோப்பறிந்.