பக்கம் : 1042 | | | 1680. | அருமணிக் கலாப வல்கு 1லவிழ்துகி லசைத்து மீட்டும் திருமணி வண்ண னோடுந் தேவியர் 2திளைத்துத் தெண்ணீர்ப் புரிமணிப் பொன்செய் வாவிப் புணைபுறந் தழுவிப் புக்கார் கருமணி வண்டுந் தேனுங் கையுறக் கலந்த தன்றே. | (இ - ள்.) அருமணிக் கலாபம் அல்குல் அவிழ்துகில் அசைத்து - அரிய பதினாறு கோவைமணிகளாலே ஆய காஞ்சியை அணிந்த அல்குற்றடத்தினின்றும் அவிழ்ந்து நெகிழ்ந்த தத்தம் ஆடைகளை நன்கு உடுத்துக்கொண்டு, தேவியர் - அம்மகளிர்கள், மீட்டும் - மறுபடியும், திருமணி வண்ணனோடும் - நீலமணி வண்ணனாகிய திவிட்டநம்பியோடே, திளைத்து - ஆடி, தெண்ணீர் புரி மணிப்பொன் செய்புணை புறந்தழுவி வாவி புக்கார் - தெளிந்த நீர்மையுடைய விரும்புதற்குரிய மணிகளாலும் பொன்னாலும் அழகுறுத்திய தெப்பங்களைத் தழுவிக்கொண்டு வாவியிலே புகுந்தனர், கருமணி வண்டும் தேனும், கையுறக் கலந்த தன்றே - கரிய மணி நிறமுடைய வண்டுகளும் தேனும் பொருந்திக் கலந்தன, (எ - று.) தேவியர் நம்பியோடு கலத்தலும், ஆண் வண்டுகளும் பெண் வண்டுகளும் தம்முட் கலந்தன, என்க. | (550) | | வேறு | 1681. | கொங்கைக டுளும்பநீர் குடைந்துங் கொய்தளிர் அங்கையி னோன்புணை தழுவி யாடியுஞ் செங்கயற் கண்மலர் சிவப்ப மூழ்கியு மங்கையர் புனற்றொழின் மயங்கிற் றென்பவே. | (இ - ள்.) கொங்கைகள் துளும்ப நீர் குடைந்தும் - முலைகள் அசையும்படி நீரிலே ஆடியும், கொய்தளிர் அங்கையின் நோன் புணை தழுவி ஆடியும் - கொய்தற்குரிய தளிர் போன்ற அழகிய கைகளாலே வலிய புணைகளைத் தழுவி நீந்தியும், செங்கயல் கண்மலர் சிவப்ப மூழ்கியும் - செவ்விய கயல் மீன்போன்ற கண்ணாகிய மலர்கள் சிவக்கும்படி நீரினில் மூழ்கியும், மங்கையர் புனல் தொழில் - தேவியருடைய நீர்விளையாடல், மயங்கிற்று என்பவே - இவ்வாறு பொருந்தாநின்றது என்று கூறுவர், (எ - று.) குடைந்தும் ஆடியும் சிவப்ப மூழ்கியும் தேவியரின் புனல் விளையாடல் இவ்வாறு நிகழலாயிற்றென்க. | (551) | |
| (பாடம்) 1 வீழ்துகிலசைத்து. 2 திளைத்த. | | |
|
|