பக்கம் : 1045
 
  இளைத்தவர் மணிக்கரை யேறச் சீறடி
திளைத்துமுன் சிறிதிடஞ் சென்று மீண்டதே.
 
     (இ - ள்.) வளைத்தகை ஒண்பணைத் தோளிமாரொடு - வளையல் அணிந்த
அழகையுடைய ஒள்ளியவாய பருத்த தோளையுடைய மகளிரோடே, திளைத்து அகம்
கழுமிய தாங்கத் தெண்புனல் - ஆடி உள்ளே விம்மித மடைந்த அலைகளையுடைய
தெளிந்த நீரும், இளைத்து - ஆடலிலே இளைப்புடையராய், அவர் மணிக்கரையேற -
அம்மகளிர் அழகிய கரையிடத்தே ஏறும் போது, சீறடி திளைத்து - (பிரிவாற்றாமையால்)
அவரது சிறிய அடிகளைத் தழுவிக்கொண்டு, சிறிதிடம் - சிறிதுதூரம், சென்று - அவருடனே
போய், மீண்டது - மீளலாயிற்று, ஏ : அசை, (எ - று.)

     “ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே“
என்பவாகலின் அம்மகளிரோடே பயின்ற நீர் அவர் பிரிதலை ஆற்றாது அவரடி பற்றிச்
சிறிதிடம் சென்று மீண்டதென்க.

     அகம் நக நட்ட நட் பென்பார், தோளிமாரோடு திளைத்தகம் கழுமிய தெண்புனல்
என்றார்.

     மகளிர் கரையேறுங்கால் நீர் தள்ளுண்டு கரையேறுமாகலின் இங்ஙனம் கூறினார்.
இதனை,

     “பொங்குவெங் களிறு நூக்கக் கரையொரீஇப் போயிற் றம்மா,
     கங்கையும் இராமற் காணுங் காதல தென்ன மாதோ“

எனவரும் கம்பநாடர் செய்யுளோடு (குகப்படலம். 50) ஒப்புக் காண்க.

(556)

 

திவிட்டநம்பி நீர்விளையாட் டொழிந்து பகல்மன்றம் புகல்

1687. பொழுதுசென் னாழிகை யெல்லை பூங்கழல்
தொழுதுவந் திளையவ ருணர்த்தத் தொண்டைவாய்
எழுதிய கொடியனார் சூழ வீர்ம்பொழில்
பழுதுழை யிலாப்பகற் கோயி லெய்தினான்.
 
     (இ - ள்.) பொழுதுசெல் நாழிகை யெல்லை - பகற்பொழுது நடவாநின்ற நாழிகையின்
அளவை, இளையவர் - பணிமகளிர்கள், வந்து தொழுது உணர்த்த - தம்பால் வந்து
தொழுது கூறாநிற்ப, தொண்டைவாய் - கொவ்வைக் கனிபோன்று சிவந்த வாயையுடைய,
எழுதிய கொடியனார் - ஓவியத்திலே வரையப்பட்ட பூங்கொடியை ஒத்த தன் தேவியர்,

     சூழ - புறஞ்சூழ்ந்து வர, - ஈர்ம்பொழில் - ஈரமுடைய அப்பூம்பொழிலிலே, பழுது
உழையிலா - குற்றந் தன்பால் சிறிதும் இலாத, பகற்கோயில் - பகற்காலத்தே
பயில்வதற்கியன்றவோர் அரண்மனையிடத்தே, எய்தினான் - சென்றடைந்தான், (எ - று.)