பக்கம் : 1049 | | தேவர்கள் திசைகளிலே காவாநிற்பத் தீஞ்சுவை ஆவியார் அமுது அயின்று நம்பி யிருந்தபோது தேவியர் கண்ணாற் பருகுவார்போன்று நம்பியைச் சூழ்ந்தனர் என்க. | (563) | ஒரு விஞ்சைத் தூதன் திவிட்டன்பால் எய்துதல் | வேறு | 1694. | வஞ்சியங் கொம்ப னாரு மன்னனு மிருந்த போழ்தின் விஞ்சைய னொருவன் றோன்றி விசும்பினா றிழிந்து வந்து மஞ்சிவர் சோலை வாயில் வாயிலோன் வாயி லாக அஞ்சன வண்ணன் செந்தா மரையடி வணங்கி னானே. | (இ - ள்.) வஞ்சியங் கொம்பனாரும் - வஞ்சிக்கொடிபோன்ற தேவியரும், மன்னனும் இருந்த போழ்தின் - திவிட்ட நம்பியும் இவ்வாறு வீற்றிருந்த அமயத்தே, விஞ்சையன் ஒருவன் - விச்சாதர தூதன் ஒருவன், விசும்பின் ஆறு இழிந்து வந்து தோன்றி - வான் வழியாக வந்து இறங்கி வாயிலிற்றோன்றி, மஞ்சு இவர் வாயில் - முகில் தவழும் கோபுரவாயில் காக்கும், வாயிலோன் - காவலன், வாயிலாக - தன் வருகையை அரசனுக்குக் கூறித் தனக்கு அரசனுடைய வரவேற்பைக் கூறும் வாயிலாய்ச் சென்று, அஞ்சன வண்ணன் - திவிட்ட நம்பியின், செந்தாமரை அடி வணங்கினான் - செந்தாமரை போன்ற திருவடிகளிலே வீழ்ந்து வணங்கினான், (எ - று.) நம்பி தேவியரோடே இவ்வாறு இருந்தபொழுது, ஒரு விச்சாதரன் விசும்பாறாக வந்து வாயிலோனுக் கறிவித்து அவன் வாயிலாக நம்பியை அணுகி அடிகளிலே வணங்கினான், என்க. | (564) | | திவிட்டன் சடியின் நலம் வினாதல் | 1695. | வந்தவன் வணங்க லோடு மாமனை 1நுதலி யென்னை கந்தணை யானை வேந்தன் கழலடி செவ்வி யோவென் றந்தமி லாழி யாள்வான் வினவலி னருளு மாறென் றிந்திர னனைய நீராற் கிறைஞ்சலு மிருக்க வென்றான். | (இ - ள்.) வந்தவன் வணங்கலோடும் - அவ்வாறு வந்த விச்சாதரன் வணங்கியவுடனே, மாமனை நுதலி - தன் மாமனாகிய சுவலனசடி மன்னனை நினைவு கூர்ந்தவனாய், என்னை, கந்து அணையானை வேந்தன் கழல்அடி செவ்வியோ என்று - தூதனே! தூணில் கட்டப்படும் அரசுவாவினையுடைய சடிமன்னருடைய வீரக்கழலணிந்த திருவடிகள் வலியவோ? என்று, அந்தமில் ஆழி ஆள்வான் வினவலின் - அழிவற்ற சக்கரப்படையை உடைய நம்பி வினவினனாக, அருளுமாறு என்று - அத்தூதனும், “அடிகள் விரும்பியருளிய படியே“ என்று கூறி, இந்திரன் அனைய நீராற்கு - தேவர்கோமானை ஒத்த மாண்புடைய திவிட்டநம்பியை, இறைஞ்சலும் - வணங்கியவுடன், இருக்க என்றான் - தூதனே அமர்க என்று உபசரித்தான், (எ - று.) | |
| (பாடம்) 1 நுவலி. | | |
|
|