கற்பகங்கள்; மத்தியாங்கம், தூரியாங்கம், பூடணாங்கம், மாலியாங்கம், தீபாங்கம், கிருகாங்கம், சோதிராங்கம், போசனாங்கம், பாசனாங்கம், வஸ்திராங்கம் எனப் பத்துவகைப்படும் என்பது சைன நூற்கொள்கை. இவை முறையே, பலவகைப் பானங்களையும், பலவகை வாத்தியங்களையும், பலவகை அணிகலன்களையும், பலவகை மாலைகளையும், பலவகை மணிவிளக்குகளையும், பிராசாத மண்டபாதிகளையும், ஞாயிறு திங்கள்களின் ஒளியினையடக்கும் ஒளியினையும், நான்குவகை யுணவுகளையும், வேண்டிய கலங்களையும் புதுமையான ஆடைகளையும் கொடுக்கும். இம்மரங்களின் செறிவையே கற்பகச் சோலை என்பர். யாம் - தன்மைப்பன்மை. |
(இ - ள்.) வரையின்மேல் - அவ்வெள்ளிமலையின் உச்சியில், மதி கோடுஉற - திங்கள் தன் உச்சியில் பொருந்தும்படி; வைகிய - தங்கிய; திருவ நீள் ஒளித் தென்திசை சேடிமேல் - அழகிய நீண்ட ஒளியையுடைய அவ்வித்தியாதர உலகின் தென்திசைப் பகுதியில்; இரதநூபுரச் சக்கரவாளம் என்று உரைசெய் - இரத நூபுரச் சக்கரவாளம் என்று பெயர் சொல்லப் பெறுகிற; பொன்நகர் ஒன்று உளது என்ப - அழகியநகரம் ஒன்று இருக்கின்றது என்று சொல்வார்கள். (எ - று.) இரத நூபுரச்சக்கரவாளம் என்னும் நகரம், விசயார்த்த பர்வதம் என்னும் வெள்ளிமலையின் தென்புறத்தில் உள்ளது. ஐம்பது வித்தியாதர நகரங்களையுடையது. திருவ என்னும் இடத்தில் - அ : அசை. இவ்வாறு அசை வருதலை. “திருவமேகலை“, “திருவமாமணி“, “திருவச் சீறடி“, “திருவ மன்னவன்“ என்னுமிடங்களிலும் காண்க. |