பக்கம் : 1052 | | இதுவுமது | 1698. | சுடர்மலைத் திருண்ட சோலைச் சுரேந்திர காந்த மென்னும் வடமலை நகர மாளு மன்னவன் றேவி பெற்ற தடமலர்ப் பெரிய வாட்கட் டையன்மற் றவளை யெங்கோன் விடமலைத் திலங்கு செவ்வேல் வெய்யவன் பெயரன் வேட்டான். | (இ - ள்.) சுடர் மலைத்து இருண்டசோலை - ஞாயிற்றின் ஒளியைத் தடைசெய்து இருண்டபூம்பொழில்கள் மிக்க, சுரேந்திர காந்தம் என்னும் - சுரேந்திரகாந்தம் என்னும் பெயரையுடைய, வடமலை நகரமாளும் - வடமலைக்கண் உள்ள நகரத்தை ஆட்சி செய்கின்ற, மன்னவன் தேவிபெற்ற - அரசனுடைய கோப்பெருந்தேவி ஈன்ற, தடம் மலர் பெரிய வாள்கண் தையல் மற்று அவளை - வாவிகளில் மலராநின்ற தாமரை மலர் போலும் வாள்போலும் பெரிய கண்களையுடைய அழகியாகிய அக்கோமகளை, எங்கோன் - எம் மன்னனாகிய, விடம் அலைத்து இலங்கு செவ்வேல் - கொலைத் தொழிலிலே நஞ்சினையும் வென்று விளங்காநின்ற செவ்விய வேலையுடைய, வெய்யவன் பெயரன் வேட்டான் - அருக்ககீர்த்தி என்பவன் மணந்தனன், (எ - று.) அரசற்குத் தேவியர் பலரிருத்தலின் சிறப்புடைய கோப்பெருந்தேவி பெற்ற மகள் என்பான், “மன்னவன் றேவி பெற்ற“ என்றான். சுரேந்திர காந்த நகரத்தை ஆளும் மன்னன் மகளை, எங்கோன் அருக்ககீர்த்தி மணந்தான் என்றான், என்க. | (568) | | ஞாயிறு மறைதல் | 1699. | என்றவன் பெயர்த்துஞ் சொல்ல வின்பநீர் வெள்ள மூழ்கி மின்றவ ழிலங்கும் வேலான் விஞ்சைய னவனைப் போக்கிச் சென்றுதன் கோயில் சேர்ந்தான் செங்கதிர்த் திகிரி யானு மன்றழல் சுருங்க முந்நீ ரலைகட லழுவம் பாய்ந்தான். | (இ - ள்.) என்று அவன் பெயர்த்தும் சொல்ல - என்று அத்தூதன் மறுபடியும் ஓதி உணர்த்த, இன்பநீர் வெள்ளம் மூழ்கி - பேரின்பமாகிய வெள்ளத்திலே முழுகி, மின் தவழ்ந்து இலங்கும் வேலான் - ஒளிபாய்ந்து திகழாநின்ற வேற்படையையுடைய திவிட்டநம்பி, விஞ்சையனவனைப் போக்கி - அவ்விச்சாதரதூதனைச் சிறப்புடன் விடையீந்து செலுத்திய பின்னர், சென்று தன் கோயில் சேர்ந்தான் - அவ்விடத்தினின்றும் போய்த் தன் அரண்மனையை எய்தினான், அன்று - அற்றைநாள், செங்கதிர்த் திகிரியானும் - சிவந்த சுடருடைய ஒற்றையாழியோனாகிய கதிரவனும், அழல்சுருங்க - வெப்பம் அகலுமாறு, முந்நீர் அலைகடல் அழுவம் - மூன்று நீர்களாலே பெருகிய அலையுடைய கடலாகிய நீர்நிலையை, பாய்ந்தான் - அடைந்தான், (எ - று.) | |
| | | |
|
|