பக்கம் : 1053
 

     என்று தூதன் கூறாநிற்ப நம்பி இன்ப வெள்ளத்தே மூழ்கிச் சிறப்புடன் அவனைப்
போக்கித் தன் அரண்மனையைத் தேவியரோடே எய்தினன், அப்பொழுது ஞாயிறு
மேலைக்கடலில் மறைந்தான் என்க.

தேவியரோடே நம்பி நீர்விளையாடுதலைக் கண்டிருந்த ஞாயிறு, தானும் வெப்பநீங்க நீராடல்
செய்வான் அலைகடல் அழுவம் பாய்ந்தான் என்க.

(569)

 

அந்தி மாலைச்சிறப்பு

1700. அழலவன் குளித்த பின்னை
     யணங்கிவ ரந்தி யென்னும்
மழலையங் கிளவிச் செவ்வாய்
     1மடந்தைவந் தடைந்த போழ்தில்
குழலமர் கிளவி யார்தங்
     கூந்தலுட் குளித்து விம்மி
2எழிலகி லாவி போர்ப்ப
     விருவிசும் பிருண்ட தன்றே.
 
     (இ - ள்.) அழலவன் குளித்த பின்னை - கதிரவன் மறைந்த பின்னர், அணங்கு இவர்
அந்தி என்னும் - அழகு படர்கின்ற அந்திமாலை என்னும், மழலை அங்கிளவி செவ்வாய் -
மழலை மிழற்றுகின்ற அழகிய மொழிகளையும் சிவந்த வாயையும் உடைய, மடந்தை -
நங்கையாவாள், வந்து அடைந்த போதில் - உலகிலே வந்து சேர்ந்த அமயத்தே, குழல்அமர்
கிளவியார் தம் - வேய்ங்குழலும் விரும்புதற்குக் காரணமான இனிமையுடைய மொழிகளை
மிழற்றும் மகளிருடைய, கூந்தலுள் குளித்து - கூந்தலினுள்ளே முழுகி, விம்மி - பெருகி,
எழில் அகில் ஆவி போர்ப்ப - அழகிய அகிலாலாய நறுமணப்புகை மறைத்தலாலே, இரு
விசும்பு இருண்டது - பெரிய வானம் இருண்டது, அன்று, ஏ : அசைகள், (எ - று.)
 
 

     (பாடம்) 1 மடந்தையு மடைந்த. 2 எழிலதிலாவி போழ்ப்ப. சூ-67