பக்கம் : 1057 | | (இ - ள்.) காதலால் உரிமை பாங்கில் - மிக்க காதற் காமத்தாலே, தன் உரிமையாகிய தேவியர் பகுதியிலே, கடிகமழ் காமவல்லித் தாது எலாம் தகர்ந்துசிந்த - அத்தேவியராகிய காமவல்லி என்னும் கொடிகளின் பூந்தாதுகள் சிந்தும்படி, திளைத்த - ஆடிய, அத்தடக்கை வேழம் - அந்நம்பியாகிய பெரிய கையையுடைய களிறு, மாதராள் அமிழ்து இன் சாயல் தோட்டியால் வணக்கப்பட்டு - அழகியாகிய சுயம்பிரபையின் அமிழ்தத்தை ஒத்த இனிய சாயல் என்னும் அங்குசத்தாலே குத்தி வழிப் படுத்தப்பட்டு, போது உலாம் புணர்மென் கொங்கைக் குவட்டிடை - மலர்கள் பொருந்திய புணர்தற்கினிய மெல்லிய கொங்கை நுனியென்னும் தறியிலே, பூண்டதன்றே - தளை பூண்டது, அன்று, ஏ : அசைகள், (எ - று.) காதலுரிமையுடைய தேவியராகிய காமவல்லிகளின் தாது சிந்தத் திளைத்த அக்களிறு சுயம்பிரபையின் சாயலாகிய தோட்டியாலே குத்தி அவள்பாற் றிருப்பப்பட்டு அவள் கொங்கைக் குவடாகிய தறியிலே நன்கு கட்டுண்டது என்க. தேவியின் இனிய சாயல் நம்பியைப் புறம் போகாது தன்பால் ஈர்த்துத் திருப்பலின் அதனை யானையை மடக்கும் தோட்டியாக உருவகித்தார், நங்கையின் கொங்கைகள் நம்பியைப் புறம்போகாது தம்பால் தாழ்ந்துகிடக்கச் செய்தலாலே அவற்றைத் தறியாக உருவகித்தார் இவ்வாறே:- “மூசுதேன் வாரி யல்குற் பட்டபின் முலைகள் என்னும் மாசறு கந்தின் மென்றோள் மணித்தொடர்க் கொளுத்தி வாட்கண் ஆசறு வயிரத் தோட்டி நுதலணிந் தமுதச் செவ்வாய் காசறு கவள மாகக் களிறுகோட் பட்ட தன்றே“ - (சிந்தா. 1690) எனச் சிந்தாமணியுடையாரும் கூறினமை காண்க. | (575) | | சுயம்பிரபை கனாக் காண்டல் | 1706. | செங்கயற் கண்ணி னாளுஞ் செல்வனுந் திளைத்துத் தீந்தேன் பொங்கிய வமளி மேலாற் புணர்முலை நெருங்கப் புல்லித் தங்கிய பொழுதிற் றாழ்ந்து தண்கதிர் மதியந் தானே மங்கைதன் பவழச் செவ்வாய் மடுத்தக மடைந்த தன்றே. | (இ - ள்.) செங்கயல் கண்ணினாளும் செல்வனும் - செவ்விய கயல்மீன் போன்ற கண்களையுடைய சுயம்பிரபையும் திவிட்ட நம்பியும், திளைத்து - காமவின்பத்தே அழுந்தி, தீந்தேன் பொங்கிய அமளி மேலால் - தீவிய தேன் மிக்க மலரணைமேலே, புணர்முலை நெருங்கப் புல்லி - புணர்தற்குரிய முலைகள் ஞெமுங்குமாறு தழீஇ. தங்கிய பொழுதில் - புணர்ச்சி தவிர்ந்து இன்பத் துயிலிற்றங்கியபோது, தண் கதிர்மதியம் தானே தாழ்ந்து - விசும்பின் கண்ணதாகிய குளிர்ந்த நிலவினையுடைய திங்கள் மண்டிலம் தன்பால் இறங்கிவந்து, மங்கை தன் பவழச் செவ்வாய் மடுத்து - சுயம்பிரபையினது பவழம் போன்று சிவந்த திருவாயிடத்தே புகுந்து, அகம் அடைந்த-திருவயிற்றூடே சென்று தங்கிற்று, அன்று, ஏ : அசைகள், (எ - று.) | |
| | | |
|
|