பக்கம் : 1059
 

     (இ - ள்.) கருமணிவண்ணன் - மரகதமணி வண்ணனாகிய திவிட்டநம்பி, கணங்குழை
- வட்டமாகிய தோடணிந்த சுயம்பிரபாய், அஞ்சல் - அஞ்சாதே கொள், இவ்வுலகம்
எல்லாம் வணங்கி - இம்மண்ணுலகம் அனைத்தும் ஒருசேர வணங்கி, மகிழ்ந்து - உளம்
மகிழ்ந்து, கண் பருகும் நீர்மை - கண்ணாலே அள்ளிப்பருகும் தன்மையுடைய, அணங்கு
இவர் - அழகு மிகுகின்ற, சிறுவன் வந்து - மகன் ஒருவன் வந்து, உன் அணிவயிற்று
அகத்துப்பட்டான் - உன்னுடைய அழகிய வயிற்றிலே தங்குவானாயினான், என்று - என்று
அக்கனவின் பயனைக் கூறி, தேற்ற - தேவியைத் தெளிவிப்ப, பணம் குலாம் பரவை
அல்குல் - பாம்பின் படத்தை ஒத்த பரந்த அல்குற்றடத்தை யுடைய, பாவையும் -
சுயம்பிரபையும், பரிவுதீர்ந்தாள் - அச்சம்விட்டு மகிழ்வாளாயினள், (எ - று.)

     நங்கையின் கனாவினைக் கேட்டநம்பி அதன் பயன் கூறுவான், அணங்கிவர் சிறுவன்
வந்து உன் அணி வயிற்றுப் பட்டான் என்ன, நங்கை வருத்தம் நீங்கிமகிழ்ந்தாள், என்க.

(578)

 

lதிங்கள் மறைதலும் ஞாயிறு தோன்றுதலும்

1709. கங்குல்வாய் மடந்தை கண்ட
     கனவுமெய் யாகல் வேண்டி
மங்குல்வா னகட்டுச் சென்று
     மதியவன் மறைந்த பின்னை
அங்குலா யிருளை நீக்கு
     1மாயிரங் கதிரி னானும்
கொங்குலாங் குழலி காணுங்
     குழவிய துருவங் கொண்டான்.
 
     (இ - ள்.) கங்குல்வாய் மடந்தை கண்ட - அவ்விரவிலே கோப்பெருந் தேவி கண்ட,
கனவு மெய்யாகல் வேண்டி - கனா நனவாகும் பொருட்டு, மங்குல்வான் அகட்டுச் சென்று -
இருண்ட விசும்பின் நடுவே போய், மதியவன் மறைந்த பின்னை - திங்கள் மறைந்த
பின்னர், அங்கு உலாம் இருளை நீக்கும் - அவ்விசும்பிடத்தே பரவிய இருளை அகற்றா
நின்ற, ஆயிரம் கதிரினானும் - ஆயிரம் சுடர்களையுடைய ஞாயிறும், கொங்கு உலாம்
குழலி காணும் குழவியது - மணங்கமழ்கின்ற கூந்தலையுடைய தேவி கனவுகண்டதின்
பயனாய் இனித் தோன்ற நிற்கும், மகவினுடைய, உருவம் கொண்டான் - உருவத்தைத்
தேவிக்குக் காட்டுவான் போன்று எழில் மிக்க வடிவுடன் தோன்றுவானாயினன், (எ - று.)

     நங்கை கண்ட கனாவை உண்மையே ஆக்குவான் போன்று திங்கள் மறைந்துவிட
நங்கையின் வயிற்றிற் பட்ட மகவின் எழில் இற்றெனக் காட்டுவான் போன்று ஞாயிறு
தோன்றினன் என்க.

(579)

 

     (பாடம்) 1 மாயிரக் கதிரனானும்.