பக்கம் : 1060
 

சுயம்பிரபை வயிறு வாய்த்தல்

வேறு

1710. குலம்புரி சிறுவனைத் தரித்துக் கோலமா
1நிலம்புரி நிழலொளி 2நிரந்து தோன்றலால்
வலம்புரி மணிக்கரு விருந்த தன்னதோர்
நலம்புரி திருவின ணங்கை யாயினாள்.
 
     (இ - ள்.) குலம்புரி சிறுவனை - தன் குலத்தை விளக்கும் மகவினை, தரித்து - தன்
வயிற்றிலே தாங்கி, கோலமா நிலம்புரி நிழல் ஒளி - அழகிய பெரிய உலகம் விரும்புகின்ற
தண்ணிய ஒளியை, நிரந்து - பரப்பி, தோன்றலால் - காணப்படுதலாலே, நங்கை -
சுயம்பிரபை, வலம்புரி - வலம்புரி என்னும் சிறந்த சங்கு, மணிக்கரு இருந்தது - முத்தாகிய
கருவைத் தன் வயிற்றிலே கொண்டிருந்தது, அன்னதோர் - போன்றதொரு, நலம்புரி
திருவினள் ஆயினாள்-நன்மை மிக்க செல்வம் வாய்த்தவளாயினள், (எ - று.)

     நன்கலம் நன்மக்கட் பேறு என்பவாகலின், “நலம்புரி திரு“ என்றனர்.

     சுயம்பிரபை கருக்கொண்டுள்ள அறிகுறி திருமேனியிலே விளங்க வலம்புரிச் சங்கு
முத்தைக் கருக்கொண்டு திகழுமாப் போலே திகழ்ந்தாள், என்க.

 (580)

 

சுயம்பிரபையின் திருமேனியின் பொலிவு

1711. மின்னிலங் கவிரொளி மேனி மெல்லவே
தொன்னலம் பெயர்ந்துபொன் சுடர்ந்து தோன்றலான்
மன்னிலங் கருமணி வளர வாளுமிழ்
பொன்னிலம் 3புரைவதோர் பொலிவு மெய்தினாள்.
 
     (இ - ள்.) மின் இலங்கு அவிர் ஒளி மேனி - மின்னல் போன்று விளங்கிப்
பரவாநின்ற ஒளியையுடைய தேவியின் திருமேனி, மெல்லவே - பையப்பைய, தொல் நலம்
பெயர்ந்து - பழையவண்ணம் மாறுபட்டு, பொன் சுடர்ந்து - பொன்நிறம் பாய்ந்து,
தோன்றலால் - திகழ்தலாலே, மன் இலங்கு - நிலை பேறுடைத்தாய்த் திகழாநின்ற,
அருமணி வளர - அரிய மாணிக்கமணி தன் அகட்டிலே தோன்றி முதிராநிற்ப, வாள்
உமிழ் - புதிய ஒளியைப் பரப்புகின்ற, பொன்னிலம் புரைவது ஓர் - அழகிய நிலத்தைப்
போல்வதொரு, பொலிவும் எய்தினாள்-புத்தெழிலையும் படைத்தாள், (எ - று.)
 

     (பாடம்) 1 நலம்புரி. 2 பரந்து. 3 புரிவதோர்.