பக்கம் : 1061
 

      தன்னகாட்டிலே மணிகள் உருப்பெற்று வளரப்பெற்ற நிலம், இரவில்
ஒளிவட்டமுடையதாய்க் காணப்படும் என்று கூறுப வாகலின், இவ்வா றோதினார்.
தேவி தன் அகட்டிலே  கருவளருந்தோறும்  பொன்னொளி  மிக்குத்  திகழ்பவள்,தன்
அகட்டிலே  மாணிக்கமணி  உருப்பெற்று வளருந்தோறும்  ஒளிமிகும்  பொன்  நிலத்தை
ஒத்தாள் என்க.

(581)
 

சுயம்பிரபை கருவுயிர்த்தல்

1712. கோணலம் பொலிந்துவிண் குளிரக் குங்குமத்
தோணலம் பொலிந்ததோர் தோன்ற லோடுதன்
கேணலம் பொலிதரக் கிளருஞ் சோதிய
நாணலம் பொலிதர நம்பி தோன்றினான்.
 
     (இ - ள்.) கோள் நலம் பொலிந்து - ஞாயிறே முதலிய கோள்கள் நன்னிலையிலே
நின்று விளங்கவும், விண் குளிர - வானவர் மகிழவும், கிளரும் சோதி அம் நாள் நலம்
பொலிதர - திகழாநின்ற சோதி என்னும் அழகிய விண்மீனுக்குரிய நன்மை சிறப்புற் றமையா
நிற்பவும், குங்குமத்தோள் நலம் பொலிந்தது ஓர் - குங்குமச் சாந்தணிந்த தோளினது
நன்மையாகிய பேராற்றலாலே திகழ்வதொரு, தோன்றலோடு - திவிட்ட நம்பியோடு, தன்
கேள் நலம் பொலிதர - தன்னுடைய பிற கேளிர்களும் நன்மையாலே விளங்கா நிற்பவும்,
நம்பி தோன்றினான் - மகன் பிறந்தனன், (எ - று.)

     ஞாயிறே முதலிய கோள்கள் தாம் நிற்கும் இடங்களால் நன்மை மிகுவனவாக
விண்குளிரச் சோதி மீனுக்குரிய நாளிலே, திவிட்டனோடு தன் சுற்றத்தாரும்
நன்மையடையும்படி நம்பி தோன்றினான் என்க.

     நம்பி ஈண்டு ஆண்மகவு என்னு மாத்திரையாய் நின்றது.

(582)

 

அப்பொழுது நிகழ்ந்த ஆரவாரம்

1713. பொலிகெனு மொலிகளும் பொன்செய் மாமணி
ஒலிகல வொலிகளும் விரவி யூழிநீர்
கலிகெழு கனைகடல் கலங்கி யன்னதோர்
பலிகெழு முரசொலி பரந்தொ லித்ததே.
 
     (இ - ள்.) ஊழி கலிகெழு கனை நீர் கடல் - இறுதிக்காலத்தே முழக்க மிக்கு
ஆரவாரிக்கின்ற நீர் மிக்க கடல், கலங்கியன்னதோர் - பொங்கிக் கலங்கினாற்
போன்றதொரு, பலிகெழு முரசொலி - வழிபாடு கொள்கின்ற மங்கல முரசங்களின் பேரொலி,
பொலிகெனும் ஒலிகளும் - “நம்பி நீடூழி வாழ்க“ என்னும் வாழ்த்தொலியும், பொன் செய்
மாமணி ஒலிகல வொலிகளும் - பொன்னாலியன்ற சிறந்த மணிகள் அழுத்தப்பெற்ற
ஒலிக்கும் மரபினையுடைய நூபுரம் முதலிய அணிகலன்களின் ஒலியும், விரவி - கலந்து,
பரந்து - நகர் முழுதும் பரவா நின்று, ஒலித்ததே - முழங்கிற்று, ஏ : அசை, (எ - று.)