பக்கம் : 1066
 

     பொலிவுரை - வாழ்த்துரை; பொலிக என்னும் வாழ்த்துரை என்றவாறு.

     அறவோராகிய அந்தணரும் மறமிக்க மன்னரும் பிறசான்றோரும் வந்து அக்குழவியை
ஏந்தினராய் வாழ்த்தும் ஒலிமிக்க தென்க.

(590)
 

அம்மகப்பேற்றைக் குறித்து நிதி வழங்குதல்

1721. 1குருமணிக் கோவையுங் குளிர்பொற் குன்றமும்
அருமணிக் கலங்களு மரத்த வாடையும்
புரிமணி வளநகர் புகுந்து கொள்கெனக்
கருமணி யொளியவன் கவரக் காட்டினான்.
 
     (இ - ள்.) குருமணிக் கோவையும் - நிறமமைந்த மணி வடங்களையும், குளிர்பொன்
குன்றமும் - மனங்குளிர்விக்கும் பொன்குவியலாகிய மலைகளையும், அருமணிக்கலங்களும் -
பெறற் கரிய மணிகள் அழுத்தப்பெற்ற அணிகலன்களையும், அரத்த ஆடையும் -
செம்பட்டாடை களையும், புரிமணி வளநகர் புகுந்து கொள்க என - விரும்பத்தகுந்த
அழகிய வளப்பமிக்க நம் அரண்மனைக் கருவூலத்தே புகுந்து, வேண்டிய வற்றை அள்ளிக்
கொள்ளக்கடவீர் என்று அருளி, கருமணி ஒளியவன் - மரகத மணி வண்ணனாகிய
திவிட்டநம்பி, கவர - இரவலர் தாமே புக்கு வேண்டியவற்றைக் கொள்ளுமாறு, காட்டினான்
- கருவூலத்தைத் திறந்து யாவர்க்கும் காட்டா நின்றான், (எ - று.)

     திவிட்டநம்பி கருவூலத்தைத் திறந்து கோவையும் பொன்குன்றமும் கலங்களும்
ஆடையும் இரவலர் தாமே புக்கு வாரிக்கொள்க என அவர்க்குக் காட்டினன்; என்க.

     இது திவிட்டநம்பியின் மகிழ்ச்சி மிகுதி கூறிற்று.

(591)

 

அம் மகவினுக்கு “விசயன்“ எனப் பெயர் சூட்டல்

1722. திருவொடு திசைமுகந் தெளிர்ப்பத் தோன்றினான்
திருவொடு வென்றியிற் சேரு மாதலால்
திருவொடு 2திகழ்தர விசய னென்றரோ
திருவுடை மார்பனை நாமஞ் சேர்த்தினார்.
 
     (இ - ள்.) திருவொடு திசைமுகம் தெளிர்ப்ப - செல்வத்தோடே எட்டுத் திசைகளும்
செழிப்புற்றுத் திகழும்படி, தோன்றினான் - தோன்றியவனாகிய நம்பி, திருவொடு -
திருமகளோடே, வென்றியில் - வெற்றி மகளையும், சேரும் ஆதலால் - எய்துவன்
ஆதலாலே, திருவொடு திகழ்தர - அவ்வெற்றியாகிய நன்மையோடே விளங்கும்படி,
விசயன் என்று - “விசயன்“ என்னும், நாமம் - திருப்பெயரை, திருவுடைமார்பனை
சேர்த்தினார் - திருமகள் வதியும் மார்பையுடைய அம்மகனுக்கு வழங்கலாயினார், (எ - று.)
 

     (பாடம்) 1 கூர்வையும். 2பெயரிய.