பக்கம் : 1068
 

     திகழா நின்ற வேற்படையையுடைய திவிட்டநம்பியும், பணிவரை - ஏவலரை நோக்கி,
நீர் பாங்கின் கொணர்மின் என்றனன் - நீயிர் சென்று அவ்விமானத்தில் வந்தோரை
எம்பாற் கொணர்க என்று கட்டளையிட்டருளினான், (எ - று.)

     பணிவர் - பணியாளர்.

     பணியாளர் நம்பியின் பாலெய்தி ஒரு விமானம் நம் நகரில் வந்துளதென்ன
அவ்விமானத்தே வந்தாரை எம்பாற் கொணர்க என்று அப்பணியாளர்க்கு நம்பி பணித்தான்
என்க.

(594)

 
1725. மஞ்சுசூழ் மழைநுழை மானந் தன்னுளோர்
விஞ்சையர் மடந்தையர் விளங்கு மேனியர்
கஞ்சுகி யவரொடு மிழிந்து காவலன்
இஞ்சிசூழ் நகரணி யிருக்கை யெய்தினார்.
 
     (இ - ள்.) மஞ்சுசூழ் மழை நுழை மானம் தன் உளோர் - முகில்சூழ்ந்து பொழியும்
மழையூடேயும் நுழைந்து செல்லும் விமானத்தினுள்ளே உளராகிய, விஞ்சையர் மடந்தையர்
- ஒரு சில விச்சாதரரும் மகளிர்களும், விளங்கும் மேனியர் - திகழ்கின்ற
திருமேனியுடையோர், இழிந்து - கஞ்சுகியவரொடும் அவ்விமானத்தினின்றும் இறங்கி
அரசனது ஏவலருடனே, காவலன் - திவிட்டநம்பியினுடைய, இஞ்சி சூழ் நகர் -
மதிலாற்சூழப்பட்ட அரண்மனை அகத்தே, அணி இருக்கை எய்தினார் - அழகியதோர்
அத்தாணி இருக்கையை அடைந்தார், (எ - று.)

     மழையூடும் நுழைந்து செல்லும் அவ்விமானத்தே வந்த விச்சாதரராகிய ஆடவரும்,
மகளிரும் கஞ்சுகியரோடே நம்பியின் அத்தாணி இருக்கையை எய்தினர் என்க.
மழைநுழை மாடம் என்றும் பாடம்.

(595)

 

விமானத்தின் வந்த விஞ்சைமாதர் நம்பிக்கு நெய்பெய்தல்

1726. பொலிகெனப் புரவலன் பொன்செய் நீண்முடி
மலிதரு நறுநெயம் மகளிர் பெய்தலுங்
கலிதரு கனைகட லன்ன காதலோ
டொலிதரு நகையொலி யுவந்தெ ழுந்ததே.