பக்கம் : 1070
 

      இதுமுதல் 9 செய்யுள் ஒரு தொடர்

      (இ - ள்.) மங்குல்தோய் மணிவரை மன்னன் தன் மகள் - முகில்கள் பொருந்திய
அழகிய வடமலையின்கண் உள்ள சுரேந்திரகாந்த நகரத்து அரசனுடைய மகளாகிய,
தொங்கல் சூழ் சுரிகுழல் சோதிமாலை - மலர்மாலைகள் சுற்றப்பட்ட சுரிந்த
கூந்தலையுடைய சோதிமாலை என்னும் அரசிளஞ் செல்வி, எங்கள் கோன் - எம்
அரசனாகிய, எறிகதிர்ப் பெயரன் - அருக்ககீர்த்தி என்னும், பெயரையுடைய கொங்குசேர்
அலங்கலான் - மணந் தங்கிய மலர் மாலையையுடையோன், குளிர - மனமகிழும்படி,
தங்கினாள் - அவனுடன் உறைந்தாளாக, (எ - று.)

     எம்மரசனாகிய அருக்ககீர்த்தி சுரேந்திரகாந்தத்து மன்னன் மகளாகிய சோதிமாலை
என்பாளாகிய தன் மனைவியோடே மகிழ்ந்துறைந்தானாக என்றபடி.

(598)

 

சோதிமாலையின் கனா

1729. மங்குல்வான் மழைகெழு மின்னின் மன்னவன்
தொங்கல்வாய் மடந்தைகண் டுயிலு மாயிடைக்
கங்குல்வாய்க் கதிர்மதி கவானின் மேலிருந்
தங்கண்மால் விசும்பக மலர்வித் திட்டதே.
 
     (இ - ள்.) மங்குல்வான் மழைகெழு மின்னின் மன்னவன் தொங்கல்வாய் மடந்தை -
முகில் மிக்க வானிடத்தே அம்மழையினூடே தவழும் மின்னற் கொடிபோன்ற
சுரேந்திரகாந்த மன்னனுடைய, மலர்மாலை அணிந்த மகள் ஆகிய சோதிமாலை,
கண்டுயிலும் ஆயிடை - மேனிலைமாடத்தே உறங்கியதொரு பொழுதிலே, கங்குல்வாய் -
இரவின்கண், கதிர்மதி - நிலாவொளியையுடைய திங்கள் மண்டிலம், கவானின் மேலிருந்து -
தனது தொடையிலிருந்து சென்று, அங்கண்மால் விசும்பு அகம் அலர்வித்திட்டது - அழகிய
இடம் விரிந்த பெரிய வானிடமெங்கும் விளக்கம் செய்தது, (எ - று.)

     கவான்: இடக்கரடக்கல்.

     சோதிமாலை கண்டுயிலும்போது தன் தொடையினின்றும் போய் வானிடமெங்கும்
ஒருதிங்கள்விளக்கஞ் செய்யக் கனாக் கண்டாள் என்க.

(599)

 

சோதிமாலை வயிறு வாய்த்தல்

1730. தெண்கதிர்த் திருமணி கனவிற் சேர்ந்தபின்
கண்கதிர்த் திளமுலை கால்ப ணைத்தன
தண்கதிர்த் தமனியப் பாவை போல்வதோர்
ஒண்கதிர்த் திருமக ளுருவ மெய்தினாள்.