(இ - ள்.) மாணிக்கம் அரும்பிய - மாணிக்கம் என்னும் மணிகள் ஒளிவிடுகின்ற, வண்பொன் மாநிலத்து - வளவிய பொன்மயமான மலை நிலத்திலே, ஆணிப்பொன் அனையவள் - மாற்றுயர்ந்த பொன்னை நிகர்த்த சோதிமாலை, அனையள் ஆயபின் - அவ்வாறாயின பின்னர், கோள்நிற்கும் விசும்பிடை - கோள்கள் உளவாகிய வானிடத்தே, குழவித் திங்களும் - இளந் திங்களும், நாணிப்போம் உருவொடு - நாணுதற்குரிய பேரொளியோடே, நம்பி தோன்றினான் - திருமகன் பிறந்தனன், (எ - று.) ஆணிப் பொன் - உறையிடப்பட்ட பொன், ஆணி - கட்டளை. குழவித் திங்கள் என்றது - குழவிஞாயிறு என்றாற் போன்று கீழ்த் திசையிலே தோன்றும் முழுத்திங்களை என்க; பிறையை யன்று. சோதிமாலைக்குத் திங்களும் நாணும் எழிலுடன் நம்பி தோன்றினான் என்க. |
(இ - ள்.) தேம் மரு செங்கழுநீரின் - தேன் பொருந்திய செங்கழுநீர் மலர்போன்ற, செவ்விதழ் - செவ்விய உதடுகளையும், காமரு பவழவாய் - விரும்புதற்குரிய பவழம் போன்ற திருவாயினையும், தாமரை அக இதழ் புரையும் கமழும் கண்மலர் - தாமரையினது அகவி தழை நிகர்த்த மணமுடைய கண்களாகிய மலரையும் உடைய, தானும் - அக்குழவிதானும், ஓர் பூமரு தமனியக்குழவி போலுமே - ஒப்பற்ற அழகிய பொன் மகவுபோன்று திகழ்ந்தது, (எ - று.) அம்மகவு செங்கழுநீர் மலர்போன்ற செவ்விதழும் பவழவாயும் தாமரைபுரையும் கண்ணும் உடையதாய்த் தமனியக் குழவி போலும் என்க. |