பக்கம் : 1074
 

     (இ - ள்.) ஐயனது அழகு கண் பருக - அமிததேசனின் அழகினைத் தன் கண்கள்
விரும்பிப் பருகாநிற்ப, மையணி மழை முகில் வண்ணன் - கரிய அழகையுடைய மழை
பெய்யும் முகில் போன்ற நிறமுடைய நம்பியே, மாமனார் - உன் மாமடிகள் ஆகிய
சடிவேந்தர், வையகம் உடையவற்கு - உலக முழுதும் உடைய நினக்கு, உணர்த்தி வா என
- இச்செய்தியை அறிவித்து வருதி என்று அடியேற்குக் கட்டளையிட்டருள, நெய்யொடு
வந்தனன் - யான் நெய்கொண்டு வந்துள்ளேன், நிலைமை இன்னதே - அரசே! யான்
கொணர்ந்த செய்தி யிருந்தவாறு இது, (எ - று.)

     மழைமுகில் வண்ணன் : விளி.

     அக்குழந்தையின் அழகினைத் தன் கண்ணாற் பருகிய சடிமன்னர் இச் செய்தியை
நினக்கு அறிவிக்கும்படி எனக்குக் கட்டளையிடுதலாலே யான் நெய்யோடு வந்தேன் என்று
அத்தூதன் கூறினான் என்க.

 (606)

 

நம்பி அத்தூதற்குச் சிறப்பளித்தல்

1737. என்றவன் மொழிதலு மிலங்கு நேமியான்
நின்றகஞ் சுடர்தரு நிதியி 1னீத்தமங்
கன்றவற் கருளின னரசர் செல்வமோ
டொன்றின னுவந்துதன் னுலக மெய்தினான்.
 
     (இ - ள்.) என்று அவன் மொழிதலும் - இவ்வாறு அவ்விச்சாதர தூதன்
விளம்பியவுடன், இலங்கு நேமியான் - திகழ்கின்ற ஆழிப்படையேந்திய திவிட்ட மன்னன்,
நின்று அகம் சுடர் தரும் நிதியின் நீத்தம் - நிலைத்து நின்று உள்ளொளி உமிழும் மணி
முதலிய நிதிகளாகிய வெள்ளத்தை, அங்கு அன்று அவற்கு அருளினன் - அவ்விடத்தே
அற்றை நாளிலேயே அந்தத் தூதனுக்கு வழங்கினான், அரசர் செல்வமோடு - அத்தூதனும்
அரசர்கள் விழைதற்குரிய பெருஞ் செல்வத்துடனே, ஒன்றினன் - பொருந்தியவனாய்,
உவந்து - பெரிதும் மகிழ்ந்து, தன் உலகம் எய்தினான் - தனது  விச்சாதரருலகினை
அடைந்தான், (எ - று.)

     என்று தூதன் அறிவித்தவுடனே மகிழ்ந்த நம்பி, அவனுக்கு நிதியின் நீத்தம் அன்று
அருள, அதனோடே அத்தூதன் தன்னுலகிற்கு ஏகினான், என்க.

(607)

 

    (பாடம்) 1 னீத்தமுங்.