முழுதையும் கவராநின்ற ஒளியை உடைய குளிர்ந்த திங்கள் மண்டிலம் வளர்வது போன்று, விரிவெய்தி - வளர்ச்சியுற்று, மண்கவர் சோதி - மண்ணுலகத்தை முழுதும் கவர்ந்துகொள்ளற்கியன்ற ஒளியையுடைய, தண் கதிர்வண்ணன் - குளிர்ந்த திங்கள் வண்ணனாகிய விசயன், வளர்கின்றான் - வளரா நின்றான், (எ - று.) விசயன் தெய்வம் காப்பவும், வாழ்த்தவும், தண்கதிரோன்போல் விரிவெய்தி வளர்கின்றான் என்க. |
(இ - ள்.) செம்பொன் கோவை கிண்கிணி யேங்க - செம் பொன்னாலியற்றப்பெற்ற மாலையும் கிண்கிணி என்னும் சதங்கை அணிகலன்களும் ஒலிப்பவும், திலதம்சேர் அம்பொன் கோவைப் பன்மணி மின் இட்டு அரை சூழ - மேன்மைமிக்க அழகிய பொன் ஞாணிலே கோக்கப்பட்டுப் பலவாகிய மணிகளாலியன்ற கோவை ஒளிர்ந்து இடையிலே சூழவும், பைம்பொன் கோவை பாடக மென் சீறடி நல்லார் தம் - பசிய பொன்மாலையினையும் பாடகம் என்னும் காலணியையும் அணிந்த மெல்லிய சிற்றடிகளையுடைய மகளிர்களின், பொற்கோவைப் பூண்முலை - பொன்மாலை பூண்ட முலையாகிய, முன்றில் தவழ்கின்றான் - முற்றத்திலே தவழ்ந்து பயில்வானாயினான், (எ - று.) விசயன் கிண்கிணி ஏங்கவும் அரைசூழவும் நல்லார் முலைமுன்றிலில் தவழ்கின்றான் என்க. மகளிர் - நற்றாய் செவிலித்தாய் முதலியோர் தவழ்கின்றான் என்றதற்கேற்ப முலைமுன்றில் என்றார். |