பக்கம் : 108
 
வாய்ந்து - பொருந்தி. எரிந்த செம்பொன் மாடவாயில் - தீயிலிட்டுப் புடம்வைக்கப் பெற்று
மாற்றுயர்ந்த சிவந்த பொன்னினாலாகிய மாளிகைகளின் வாயிலோடு கூடிய; ஆறு -
வழிகள்; கண்கொளப் போந்து எரிந்தபோல் - எல்லோரும் பார்க்குமாறு முழுவதும்
எரிபட்டாற்போலத் தோன்றும்படி; மரம் - எரிமரங்கள்; புறம் - வாயிற்புறத்திலே;
பொலிந்து இலங்கும் - மிகுதியாக விளங்கும். (எ - று.)

     பாரிசாதம் கற்பகச் சோதியால் செந்நிறமான மலர்கள் நிரம்பி முழுவதும்
எரிபட்டாற்போல விளங்கும் என்க. இரவில் தீப்பற்றினாற் போன்று விளங்குவதாய
ஒருமரம் எனவும், ஒளிமரம் எனவும் வழங்கும். அவ்வகை மரங்கள் அம்மலையில் உள்ள
பொன்மயமான மாளிகைகளின் வாயிலிற் பொருந்தி இரவில் ஒளி செய்யும்போது,
தொலையில் இருந்து பார்ப்பவர்கட்கு அத்தெருவிடங்கள் தீப்பட்டாற் போலத் தோன்றுந்
தன்மை பின்னிரண்டடிகளிற் கூறப்பட்டது.
 

( 15 )

இன்பத்திடையே தென்றல்

134. மாசில் கண்ணி மைந்தரோடு மங்கை மார்தி ளைத்தலில்
1பூசு சாந்த ழித்திழிந்த புள்ளி வேர்பு லர்த்தலால்
வாச முண்ட 2மாருதந்தென் வண்டு பாட மாடவாய்
வீச வெள்ளி லோத்திரப்பொ தும்பர் பாய்ந்து விம்முமே.
 

     (இ - ள்.) மாசில் கண்ணி மைந்தரோடு - குற்றமற்ற மாலையை அணிந்த
ஆடவர்களோடு; மங்கைமார் திளைத்தலில் - நங்கையர்கள் இன்பப் பெருக்கில்
திளைக்கும்போது; பூசுசாந்து அழித்து இழிந்த புள்ளி வேர்பு உலர்த்தலால் -
அணியப்பெற்ற மணப் பொருள்களைக் கலைத்துக்கொண்டு வழிந்த புள்ளி புள்ளியான
வியர்வையை உலர்த்து மாற்றால்; வாசம் உண்ட மாருதம் - மணத்தினைப் பெற்ற தென்றற்
காற்றானது; தென் வண்டு பாட - அழகிய வண்டுகளானவை இசையைப்பாட; மாடவாய்
வீச - மாளிகை களினிடத்திலே சென்று வீசுதற்பொருட்டு; வெள்ளிலோத்திரப் பொதும்பர்
பாய்ந்து விம்மும் - வெள்ளிலோத்திர மரங்கள் பொருந்திய பொழிலிலே சென்று மேலும்
மணப்பெருக்கையடையும். (எ - று.)

 


     (பாடம்) 1. பூசுசாந்த ழிந்திழிந்த. 2. மாருதம் வண்டுபாட.