பக்கம் : 1082
 

      (இ - ள்) செம்பொன் சிலம்பும் கிண்கிணியும் - செவ்விய பொன்னாலியன்ற
சிலம்புகளும் கிண்கிணிகளும், செல்வச் செஞ் சீறடிபோற்ற - செல்வமிக்க செவ்விய தன்
சிற்றடிகளை வாழ்த்த, வம்பத்துகிலின் - புதிய பட்டாடையின்மிசை, வடம் சூழ்ந்த அல்குல்
- மணிவடங்களாலே சூழப்பட்ட இடையிலே, மணிமேகலை மருட்ட - மணிமேகலை அணி
வியப்பூட்டா நிற்ப, அம்பொற்சுருளை இருபாலும் - அழகிய பொன் சுருளைகள் அணிந்த
இரண்டு செவிகளின் பக்கங்களிலும், அளக வல்லி அருகிலங்க - கூந்தற் கொடிகள் படர்ந்து
அண்மையிலே திகழா நிற்ப, பைம்பொன் சுடிகை நிழல் துளங்க - பசும் பொன்னாலியன்ற
நெற்றிச்சுட்டி ஒளிர, படர்ந்து - சென்று ஆடு ஆயம் படிந்தாள் - விளையாடுகின்ற மகளிர்
குழாத்தை எய்தினாள், (எ - று.)

     சோதிமாலை சிலம்புங் கிண்கிணியும் சீறடி போற்றவும் மணிமேகலை மருட்டவும்,
அளகவல்லி இலங்கவும் சுடிகை துளங்கவும் ஆயம் படிந்தாள் என்க.

(619)

 
1750. நங்கை நல்லார் பாராட்ட
     நகையாட் டாயம் புகலோடு
மங்கை மடவார் பந்தாடன்
     மயங்கி யாடன் மணிநிலத்துக்
கொங்கை சேர்ந்த குங்குமத்தின்
     குழம்புங் கோதை கொய்தாதும்
1அங்க ராகத் துகளும்பாய்ந்
     தந்தி வான மடைந்ததுவே.
 
     (இ - ள்.) நங்கை - சோதிமாலை, நல்லார் பாராட்ட - மகளிர்கள் பாராட்டும்படி,
நகை ஆட்டு ஆயம் - மகிழ்தற்குரிய ஆடல் மகளிர் கூட்டத்தில், புகலோடும் -
எய்தியவுடனே, மங்கை மடவார் - ஆயமகளிராய அம்மடப்பமிக்கோர், பந்தாடல் மயங்கி,
பந்து விளையாட்டிலே பொருந்தி, ஆடல்மணி நிலத்து - ஆடாநின்ற அவ்வழகிய
நிலத்திலே, கொங்கைசேர்ந்த குங்குமத்தின் குழம்பும் - அம்மகளிர் கொங்கைகளிலே
பூசப்பெற்ற குங்குமச்சேறும், கொய்கோதை தாதும் - கொய்து கட்டிய மலர்ப் பூந்துகளும்,
அங்கராகத்துகளும் - நறுமணச் சுண்ணங்களும், பாய்ந்து - உதிர்ந்து, அந்திவானம்
அடைந்ததுவே - அந்தி வானத்தின் தன்மையை அடைந்தது,
(எ - று.)

     நல்லார் பாராட்டச் சோதிமாலை ஆயம் புக்கவுடன் மடவார் ஆடலிற் பொருந்த அம்
மணிநிலம் குழம்பும் அங்கராகத் துகளும் பாய்ந்து அந்திவானம் போன்றது என்க.

(620)

 

    (பாடம்) 1 அங்கார்த் துளும்ப வதுபாயும்.