பக்கம் : 1087
 

    

1756. நறுமாலை வந்தலைப்ப நன்மேனி 1நோமா
     னங்காயிப் பந்தாட னன்றன்றா 2மென்பார்
3இறுமாலிம் மின்மருங்கு 4லென்பாவ மென்பார்
     இளமுலைமே லேர்வடம்வந் தூன்றுமா லென்பார்
5செறுமாலிங் கிவைகாணிற் றேவிதா னென்பார்
     செங்கண்மால் காணுமேற் சீறானோ வென்பார்
பெறுமாறு தாயருந் தோழியரு நின்று
     பிணையனா டன்மேற் 6பன் மொழிமிழற்று கின்றார்.
 
     (இ - ள்.) நறுமாலை வந்து அலைப்ப - நறுமணங்கமழும் மலர்மாலை மேலெழுந்து
மீண்டும் வந்து மோதுதலாலே, நன்மேனி நோமால் - உன்னுடைய மெல்லிய திருமேனி
வருந்துமே, நங்காய் இப்பந்தாடல் நன்று அன்றால் என்பார் - சோதிமாலாய்! உனக்கு
இப்பந்து விளையாடல் நல்லதன்று அதனை ஒழிக என்று கூறுவர் சிலர், என் பாவம் இம்
மின் மருங்கு இறுமால் என்பார் - இஃதென்னை! பாவம்! உனது இந்நுண்ணிடை முறியினும்
முறியுமே! என்று கூறுவர் சிலர், இள முலைமேல் ஏர் வடம் வந்து ஊன்றுமால் என்பார் -
அன்னாய்! உன் முற்றாத இம்முலைகளின் மேலே இவ்வன்மையுடைய அழகிய
மணிவடங்கள் அழுந்தி நோகுமாறு செய்யுமே என்று கூறுவர் சிலர்,

     இங்கு இவை காணில் தேவிதான் சீறுமால் என்பார் - இவ்விடத்தே
இவ்வருத்தங்களைக் காண்பாள் ஆயில் சுயம்பிரபை சினங்கொள்வாள் என்று கூறுவர்
சிலர், செங்கண்மால் காணுமேற் சீறானோ என்பார் - உன் தந்தையாகிய திவிட்டன்
கண்டால் சினங் கொள்ளானோ என்பார் சிலர், பெறுமாறு - இவ்வண்ணம் அச்சோதிமாலை
உளங்கொள்ளுமாற்றால், தாயரும் தோழியரும் - செவிலியரும் தோழி மார்களும், நின்று
பிணையனாள் தன்மேல் பன்மொழி மிழற்றுகின்றார் - சோதி மாலையின் பக்கத்தே நின்று
அவளைக் குறித்துப் பல்வேறு மொழிகளைப் பயில்வாரானார், (எ - று.)

     தாயரும் தோழியரும், பந்தாடல் நன்றன்றென்பாரும் என்பாவம் என்பாரும் ஊன்றும்
என்பாரும் தேவி செறும் என்பாரும் நம்பி சீறுமென்பாரும் ஆகிப் பன்மொழி மிழற்றினர்
என்க, இது சோதிமாலையின் மென்மைக் கிரங்கினமை கூறிற்று.

(626)

 

     (பாடம்) 1 நோமானோமா. 2 லென்பார். 3 இறுமாலே. 4 லேபாவ.
    
     5 செறுமா லிவைகாணிற். 6 பல மிழற்று.