பக்கம் : 1092
 
 முரசறைவோர் கூற்று
1764. வாழ்கநம் மன்னவன் வாழ்க 1வையகம்
ஆழ்கநம் மரும்பகை யலர்க 2நல்லறம்
3வீழ்கதண் புனர்பயிர் விளைக மாநிலம்
4தாழ்கமற் றருந்துயர் சாற்றக் கேண்மினே.
 
     (இ - ள்.) வாழ்க நம் மன்னவன் - நம் வேந்தன் வாழ்க, வாழ்க வையகம் -
இப்பேருலகம் வாழ்க, ஆழ்க நம் அரும்பகை - நம் அரிய பகைவர்கள் வீழ்ச்சியுறுக,
அலர்க நல்லறம் - மெய்யறம் மலர்ந்தோங்குக, வீழ்க தண்புனல் - குளிர்ந்த மழை நன்கு
பொழிவதாகுக, மாநிலம் பயிர் விளைக - பெரியவுலகத்தே பைங்கூழ்கள் நன்கு செழித்துப்
பயன்றருக, மற்று அருந்துயர் தாழ்க - உலகத்தில் தாங்குதற் கரிய இன்னல்கள் அழிவதாக,
சாற்றக் கேண்மினே - நகர் வாழ்வீர்! யாம் கூறும் நற்செய்தியைக் கேளுங்கோள் (எ - று.)

     “வாழ்க அந்தணர் வானவ ரானினம்
     வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
     ஆழ்ந்த தீயதெல் லாம் அரன் நாமமே
     சூழ்க வையக முந்துயர் தீர்கவேÓ
என்னும் தேவாரப் பாடலை இதனுடன் ஒப்புக் காண்க.

 (634)

 

இதுவுமது

1765. புள்ளணி வார்பொழிற் பொன்செய் மாநகர்
உள்ளணி பரப்புமி னுயர்மின் றோரணம்
வெள்ளணி விரும்புமின் விருந்து போற்றுமின்
கள்ளணி மலரொடு கலங்கள் பெய்ம்மினே
 
(இ - ள்.) புள்ளணி வார் பொழில் பொன்செய் மாநகருள் - பறவைகளால் அழகுடைத்தாய
நீண்ட பூஞ்சோலைகளுடனே அழகுற்றுத் திகழ்கின்ற நமது போதனமாநகர் அகம் எங்கும்,
அணி பரப்புமின் - ஒப்பனை செய்யுங்கோள், உயர்மின் தோரணம் -
தோரணங்களையுயர்த்துக் காட்டுங்கோள், வெள்ளணி விரும்புமின் - மங்கலவண்ணமாகிய
வெள்ளை அணிகளையே விழைந்து அணியுங்கோள், விருந்துபோற்றுமின் - விருந்தினரை
நன்கு ஓம்புங்கோள், கள் அணி மலரொடு - தேன் பொதிந்த மலர்களோடே, கலங்கள்
பெய்ம்மின் - அணிகலன்களை அணியுங்கோள், ஏ: அசை, (எ - று.)
 

     (பாடம்) 1மாநகர். 2 வையகம். 3 வீழ்க நம் அருந்துயர். 4 தாழ்க தண் புனலிவை.