பக்கம் : 1093
 

     வெள்ளணி - நாடோறும் தான் மேற்கொள்ளுகின்ற செற்றங்களைக் கைவிட்டுச்
சிறந்த தொழில்கள் பிறத்தற்குக் காரணமான நாளிடத்து மங்கலவண்ணமாகிய வெள்ளை
வண்ணமுடைய ஆடை அணி முதலியவற்றால் ஒப்பனை செய்து கோடல்;
(நச்சினார்க்கினயர்.)

     மாநகருள் அணி பரப்புமின், தோரணம் உயர்மின், வெள்ளணி அணிமின், விருந்து
போற்றுமின், கலங்கள் பெய்ம்மின் என்று கூறினர் என்க.

(635)

 
1766. இற்றை நாள்தொட்டுப் பத்துநாட்கள்
சுயம்வர விழா நாட்கள் எனல்
இன்றைநா ளுள்ளுறுத் தீரைஞ் ஞாள்களும்
மன்றலஞ் 1சுயவரம் வரைந்த தாதலால்
ஒன்றிவா ழரசரோ டுலக மீண்டுக
வென்றுதா னிடிமுர சறைந்த தென்பவே.
     (இ - ள்.) இன்றை நாள் உள்ளுறுத்து ஈர்ஐஞ் ஞாள்களும் - இந்த நாள் தொடங்கி
மேனிகழும் பத்து நாட்களும், மன்றலம் சுயம்வரம் வரைந்தது ஆதலால் - திருமணத்திற்குக்
காதரணமான சுயம்வரத்திற்கு என்று குறிக்கப்பட்டுள்ளமையால், ஒன்றி வாழ் அரசரொடு
உலகம் ஈண்டுக - கேண்மை கொண்டு வாழ்கின்ற மன்னர்களுடனே இவ்வுலகில்
வாழ்வோரெல்லாம் வருக, என்று தான் இடி முரசு அறைந்தது என்பவே - என்றிவ்வாறு
கூறி இடிக்கும் முரசு முழக்கப்பட்டது என்று மேலோர் கூறுவர், (எ - று.)

     ஞாள்கள் - நாள்கள் : நகரத்திற்கு ஞகரம் போலி.

     இன்று தொடங்கிப் பத்து நாட்கள் சுயம்வரத்திற்கென வரையறை
செய்யப்பட்டமையால் அரசர்களுடனே மக்கள் எல்லாம் அவ்விழாவிற்கு வருக என்று
முரசறைந்தனர் என்க.

(636)

 
1767. கொடிபடு நெடுநகர்க் கோயில் வீதிவாய்
இடிபடு மழைமுகி லென்ன வின்னணம்
கடிபடு முரசுகண் ணதிர்ந்த காரென
மடிபடு மாடவாய் மயில்கண் மான்றவே.
 

     (பாடம்) 1 சயமர மறைந்த.