(இ - ள்.) பொன் நகர்ப் புறத்தது ஓர் புரிசை வார்பொழில் தன் அகத்து - அழகிய போதனநகரத்தின் பக்கத்தே உளதாகிய ஒரு மதில்சூழ்ந்த நீண்ட பூம்பொழிலின் ஊடே, இயற்றிய தயங்கு பொன் நகர் - இயற்றப்பட்ட விளங்குகின்ற பொன்னாலியன்றதொரு அரண்மனையின்கண், மன்னர்கட்கு இறைவன் வந்து இருப்ப - வேந்தர் வேந்தனாகிய அருக்ககீர்த்திவந்து தங்கி இருந்தானாக, மண்மிசை இந்நகர்க்கு இறைவனும் - மண்ணுலகின்மேல் உள்ள இப் போதன நகரத்தரசனாகிய திவிட்டமன்னனும், எதிர் கொண்டு ஏகினான் - அருக்ககீர்த்தியை எதிர்கொள்ளச் சென்றான், (எ - று.) போதன நகரத்தின் புறத்தே புரிசைசூழ் பொழிலின்கண் அருக்ககீர்த்தி வந்திருப்ப, போதன மன்னனாகிய திவிட்டன் அவனை அழைக்க எதிர்கொண்டு சென்றான் என்க. |