(இ - ள்.) பளிங்குஇயல் பலகையும் - பளிங்கினால் இயன்ற பலகைகளாலும், பவழத்தூண்களும் - பவழத்தாலியன்ற தூண்களாலும், விளங்கு பொற் கலங்களும் - திகழ்கின்ற பொன்னாலாய அணிகலன்களாலும், வெள்ளி வேயுளும் - வெள்ளித் தகடுகளால் வேயப்பட்ட மாடங்களாலும், இளங்கதிர் முத்தமும் - நெகிழ்ந்த ஒளியுடைய முத்துக்களாலும், இயற்றி - இயற்றப்பட்டு, வளம் கவின்று அனையது - வளமே ஓர் அழகுடைத்தாயது போன்றது, அம்மதலை மாடமே - அந்த மதலை மாடம், ஏ : அசை, (எ - று)) அம் மதலை மாடம் பளிங்குப் பலகையும், பவழத்தூண்களும், பொற்கலன்களும், வேயுளும் முத்தமுமியற்றிய வளங்கவின்றனைய தென்க. |
(இ - ள்.) மீன்முக விசும்பிடை - உடுக்களையுடைய இடமிக்க விசும்பினிடத்தே தோன்றி, விரிந்த பால் வெண்ணிலா முகம் தொகுப்பு அன - விரிதலையுடைய பால் போலும் வெள்ளிய நிலாவொளியை ஒருமுகம்படத் திரட்டியது போன்று, பனிக்கும் வேதிகை- நீரைத் துளிக்கும் சந்திரகாந்தத் தாலாய மேடை, மேல்முகந் திருத்திய வெள்ளிமுன்றிலான் - தன்மேற் புறத்தே சீர் செய்யப்பட்ட வெள்ளித்தகடுகள் பதித்த முன்றிலிடத்தே நின்று, நான்முக மருங்கினும் நகுவது ஒக்கும் - நான்கு திசைகளினும் சிரிப்பதுபோற் றோன்றும், (எ - று.) நிலாவை தொகுத்து வைத்தது போன்று நீர்காலும் வேதிகை, முன்றிலிடத்தே நின்று நகுவது போலும் என்க. |