பக்கம் : 110
 

     (இ - ள்.) தெய்வயாறு - தெய்வத் தன்மைபொருந்திய ஆறும்; காந்தள் அம் சிலம்பு
- காந்தள் மலர்பூத்த அழகியமலையும்; தேங்கொள் பூம்பொழில் - தேன்கசிந்தொழுகும்
பூக்களால் விளங்கும் பொழில்களும்; பௌவம் முத்த வார்மணல் பறம்பு - கடலினருகே
முத்துப்போன்ற மிகுந்த மணலமைந்த மணற்குன்றும்; மௌவல் மண்டபம் -
முல்லைப்பந்தலும் ஆகிய; இன்னபோல் இடங்கள் - இத்தகைய இடங்கள்; எவ்வமாடும் -
எல்லாப் பக்கங்களினும் உளவாகி; இன்பம் ஆக்கலால் - இன்பத்தை விளைவித்தலால்;
அந்நகர்க்குக் கவ்வை ஆவது - அந்த இரதநூபுர நகரத்திற்குத் துன்பமாவது, மாரனார்
செய் கவ்வையே-காமனார் விளைவிக்கின்ற துன்பமேயாகும்.(எ- று.)

இரத நூபுர நகரத்திற்கு எத்தகைய தொல்லையும் இல்லையென்பதும், அங்கு இன்பமே
கூத்தாடுகின்ற தென்பதும் இச்செய்யுளால் உணர்த்தப் பட்டது. கவ்வை - துன்பம்.
 

( 18 )

சுவலனசடி

137. 1மற்ற மாந கர்க்குவேந்தன் மான யானை மன்னர்கோன்
அற்ற மின்றி நின்றசீர ழற்பெ யர்ப்பு ணர்ச்சியான்
முற்று முன்ச டிப் 2பெயர்சொன் மூன்று லஃகு 3மான்றெழப்
பெற்று நின்ற பெற்றியான் பீடி யாவர் பேசுவார்.
 
     (இ - ள்.) அ மா நகர்க்கு வேந்தன் - அந்தப் பெரிய இரதநூபுரச் சக்கரவாளத்திற்கு
அரச னாவான்; மானயானை மன்னர்கோன் - பெருமைமிக்க யானையையுடைய
அரசர்க்கரசன்; அற்றம் இன்றி நின்றசீர் - அழிவில்லாமல் நிலைபெற்ற புகழையுடைய;
முற்று முன்சடிப் பெயர்சொல் அழல்பெயர் புணர்ச்சியான் - முடிவதற்கு முன்னே
சடியென்ற சொல்லோடு சேர்த்துச் சொல்லப்பெறுகிற தீயின் பெயராகிய சுவலனன் என்கிற
பெயரை யுடையவன்; மூன்று உலஃகும் - மூவகை யுலகங்களும்; ஆன்றுஎழ - அமைந்து
மேம்பட; பெற்று நின்ற பெற்றியான் பீடு யாவர் பேசுவார் - பெற்றுநின்ற பெருமையை
யுடையவனது உயரிய தன்மைகளை யாவர் எடுத்துக் கூற வல்லவர்? (எ - று.) மற்று :
அசை.

 


     (பாடம்.) 1. மற்றமா நகர்க்கிறை, 2. பெயர் மூன்றுலஃகு, 3. மார்ந்தெழ.