பக்கம் : 1100
 

     அரிதின் றேந்திய அணைகளே அன்றி மகரவாசனங்களும் மயிற் கழுத்தை ஒப்பனவும்
கொட்டைகளை யுடையனவும் தூவி ஆர்த்தனவும் மணியனவுமாய் இயற்றப்பட்டனவாய்
என்க.

(649)

 
 
1780. வாரித்தண் கதிர்மணி முத்த மாலையும்
பாரித்த பளிங்கெழிற் 1பழித்த கோவையும்
பூரித்த பொழிகதிர்ப் பொன்செய் தாமமும்
வேரித்தண் பிணையலு மிடையப் 2பட்டவே.
 
     (இ - ள்.) வாரித் தண் கதிர் மணி முத்தம் மாலையும் - கடலிடத்தே தோன்றிய
குளிர்ந்த ஒளியுடைய மணியாகிய முத்துக்களால் இயன்ற மாலைகளும், பாரித்த பளிங்கு
எழில் பழுத்த கோவையும் - பருத்த பளிங்காலியன்ற அழகு முதிர்ந்த மாலைகளும்,
பொழிகதிர் பூரித்த பொன் செய்மாலையும் - பொழிகின்ற கதிர் நிறைந்த பொன்னாலியன்ற
மாலைகளும், வேரித் தண் பிணையலும் - மணமிக்க குளிர்ந்த மலர்மாலைகளும்,
மிடையப்பட்டவே - செறிக்கப்பட்டன, (எ - று.)

     முத்தமாலையும், கோவையும் தாமமும் பிணையலும் மிடையப்பட்டனவாய் என்க.

(650)

 
1781. மஞ்சுடை மாளிகை மிடைம ணித்தலம்
பஞ்சுடைத் தவிசுகள் பரப்பிப் பூவடுத்
தஞ்சுட ரிடுபுகை 3யடர்ந்தெ ழுந்தரோ
வெஞ்சுடர்க் கடவுளை விருந்து செய்தவே.
 
     (இ - ள்.) மஞ்சுடை மாளிகை மணி மிடை தலம் - முகில் தவழுகின்ற மாளிகையின்
மணிகள் செறிந்த உள்ளிடம், பஞ்சுடைத் தவிசுகள் பரப்பி - பஞ்சாலியன்ற அணைகளைப்
பரப்பி, பூவடுத்து - மலர்கள் தூவி, அஞ்சுடர் இடுபுகை அடர்ந்து எழுந்து - அழகிய
நெருப்பின்கண் அகில் முதலியவற்றை இட்டெழீ இய மணப்புகையைச் செறியப் புகைத்து,
வெஞ்சுடர் கடவுளை வெவ்விய ஞாயிற்றுக் கடவுளை, விருந்து செய்தவே - பூசனை
செய்தனவாய், (எ - று.)

     தலம் பரப்பி அடுத்து எழீஇக் கடவுளை விருந்து செய்த என்க. கடவுளை விருந்து
செய்தலாவது, பூசனை செய்தல்.

(651)

     (பாடம்) 1 பளித்த. 2 பட்டதே. 3தவழ்ந்தெ.