பக்கம் : 1102
 

     மங்கல நாழிகை வந்தது. மன்னர் சுயம்வர மண்டபத்தே வருக என்று அறிவித்தவுடன் சங்கொலி பரந்தன. முரசு ஒலித்தெழுந்தன. அரசர் தோன்றினார் என்க.

(653)
 
அயோத்தி அரசன் வருகை
வேறு
1784. எரிமணி வயிரப் பூணா னிக்குவா குலத்துட் டோன்றி
அருமணிப் புரிசை வேலி யயோத்தியாள் கின்ற வேந்தன்
திருமணி நிழற்றுஞ் செம்பொன் னெடுமுடி திருவில் வீசப்
புரிமணி யாரந் தாழப் பொன்னகர் பொலியப் புக்கான்.
 
     (இ - ள்.) எரிமணி வயிரப் பூணான் - சுடருகின்ற வயிர மணி அணிகலனைப்
பூண்டவனும், இக்குவா குலத்துட்டோன்றி - பெருமைமிக்க இக்குவாகுவின் நல்ல குலத்திலே
பிறந்து, அருமணிப் புரிசை வேலி அயோத்தி ஆள்கின்ற வேந்தன் - பெறற் கரும்
மணிகள் பதித்த மதிலை வேலியாகவுடைய அயோத்தி நகரத்தை ஆளுகின்றவனுமாகிய
மன்னன், திருமணி நிழற்றும் செம்பொன் நெடு முடி திருவில் வீச - சிறந்த மணிகள்
சுடருகின்ற செவ்விய பொன்னாலாகிய தனது நீண்ட முடிக்கலன் அழகிய ஒளியைப்
பரப்பவும், புரிமணி ஆரந்தாழ - விருப்பத்தைத் தூண்டுதலை யுடைய முத்துமாலை
தூங்கவும், பொன்னகர் - அழகிய அம்மண்டபம், பொலியப் புக்கான் - பொலிவுறும்படி
வந்து புகுந்தான், (எ - று.)

     அம் மண்டபத்தே அயோத்தி வேந்தன் நெடுமுடி திருவில் வீச ஆரந்தாழ அது
பொலியப் புக்கான் என்க.

     இக்குவாகு குலம் ஐம்பெருங்குலங்களுள் ஒன்று.

(654)

 
அத்தினபுரத்தரசன் வருகை
1785. குழவியம் பரிதி போல்வான் குருகுலங் குளிரத் தோன்றி
அழுவநீர்ப் புரிசை வேலி யத்தின புரம தாள்வான்
முழவங்க ளிரண்டு செம்பொன் முளைக்கதிர்க் கனக வல்லி
தழுவிய தனைய தோளான் றன்னொளி தயங்கச் சார்ந்தான்.
 
     (இ - ள்.) குருகுலம் குளிரத் தோன்றி - குருகுலத்தின் கண் உலகம் மகிழும்படி
பிறந்து, குழவி அம் பரிதி போல்வான் - இளைய ஞாயிற்றுமண்டிலம் போன்று
திகழ்கின்றவனும், அழுவம் நீர் புரிசை வேலி - ஆழிய அகழியையும் மதில்களையும்
வேலியாகவுடைய, அத்தினபுரமது