பக்கம் : 1103 | | ஆள்வான் - அத்தினபுரத்தை ஆட்சி செய்பவனும், முழவங்கள் இரண்டு - இரண்டு மத்தளங்கள், செம்பொன் முளைக்கதிர்க் கனகவல்லி தழுவியது அனைய தோளான் - செவ்விய பொன்னிறமுடையதும் தோன்றுகின்ற சுடர்க்கற்றையுடையதும் ஆகிய கனகவல்லி யென்னும் கொடி தம்மைச் சுற்றிப் படர்ந்தவற்றைப் போன்ற தோள்களையுடையவனுமாகிய மன்னன், தன்னொளி தயங்கச் சார்ந்தான் - தனது ஒளி திகழும்படி வந்தான், (எ - று.) கனகவல்லி படர்ந்த முழவங்கள் கடகம் செறிந்த தோள்கட்கு உவமையாயின. அத்தினபுரத்து அரசன் தன்னொளி தயங்கச் சுயம்வர மண்டபம் சார்ந்தான் என்க குருகுலம் ஐம்பெருங்குலத்துளொன்று. | (655) | | குண்டலபுரத்துக் கோமகன் வருகை | 1786. | நண்டுபொன் கிளைக்கு நாட னாதவன் குலத்துட் டோன்றிக் குண்டல புரம தாளுங் குங்குமக் குவவுத் தோளான் கண்டிகை தவழப் பூண்டு கதிர்மணி முடியின் மேலால் வண்டுகள் பரவச் சென்று வளநகர் 1மருளப் புக்கான் | (இ - ள்.) நண்டு பொன் கிளைக்கும் நாடன் - நண்டுகள் தம் கால்களால் பொற்றுகளைக் கிண்டுதற்குக் காரணமான வளமிக்க நாட்டையுடையவனும், நாதவன் குலத்துள் தோன்றி - வன்மையுடைய நாத மரபிலே பிறந்து, குண்டலபுரமது ஆளும் - குண்டலபுரத்தை ஆள்கின்ற, குங்குமம் குவவுத் தோளான் - குங்குமச் சேறப்பிய திரண்ட தோளையுடையவனும் ஆகிய அரசன், கண்டிகை தவழப் பூண்டு - தாழ்வடம் ஒளிதவழும்படி அணிந்து, கதிர்மணி முடியின் மேலால் வண்டுகள் பரவ - ஒளி மணியழுத்திய முடிக்கலன்மேலே வண்டுகள் மொய்க்கும்படி, வளநகர் மருளச் சென்று புக்கான் - வளப்பமிக்க போதன நகரத்தார் வியப்புறும்படி போய்ச் சுயம்வர மண்டபத்தே புகுந்தான், (எ - று.) நாத குலத்திலே தோன்றிக் குண்டலபுரத்தை ஆளும் மன்னன் கண்டிகை தவழப்பூண்டு வண்டுகள் பரவச் சென்று நகர் மருளப் புக்கான் என்க. நாதகுலம் ஐம்பெருங் குலத்துள் ஒன்று. | (656) | |
| (பாடம்) 1 மருவப். | | |
|
|