பக்கம் : 1104 | | வாரணவாசி மன்னன் வருகை | 1787. | ஊழிகாண் பரிய தோன்ற லுக்கிர குலத்து வேந்தன் வாழைதாழ் சோலை வேலி வாரண வாசி மன்னன் சூழிமா லியானை யுந்திச் சுடர்குழை திருவில் வீச ஏழையர் கவரி வீச வெழினக ரிசைப்பச் சென்றான். | (இ - ள்.) ஊழி காண்பரிய தோன்றல் - இறுதியில்லாத புகழையுடைய, உக்கிரகுலத்து வேந்தன் - உக்கிரமரபிற் பிறந்த மன்னனும், வாழை தாழ் சோலை வேலி வாரணவாசி மன்னன் - வாழைமரங்கள் செழித்துத் தங்குதலையுடைய பொழில்கள் சூழ்ந்த வாரணவாசியை ஆள்பவனும் ஆகியவன், சூழி மால் யானை உந்தி - முகபடாம் அணிந்த பெரிய யானையை ஊர்ந்து, சுடர்குழை திருவில் வீச - சுடருகின்ற குண்டலங்கள் சிறந்த ஒளியைப் பரப்பவும், ஏழையர் கவரி வீச - மகளிர்கள் தாமரை இரட்டவும், எழில் நகர் இசைப்ப - அழகிய நகர மாந்தர் புகழவும், சென்றான் - செல்வானாயினான், (எ - று.) தோன்றல் - புகழ். உக்கிரகுலத்தே தோன்றி இறுதியில்லாப் புகழுடையனாய், வாரணவாசியை ஆள்கின்ற மன்னன் யானையுந்தி வில் வீசக் கவரிவீச இசைப்பச் சென்றான் என்க. உக்கிரகுலம் ஐம்பெருங் குலத்துளொன்று. | (657) | | சூரியபுரத்துத் தோன்றல் வருகை | 1788. | சொரிமதுக் கலந்த சோலைச் சூரிய புரம தாளும் அரிகுலத் தரசர் கோமா 1னவிர்மணி யாரந் தாங்கிப் பொருமலைப் பகடு நுந்திப் புயலலைத் திருண்டு வீழ்ந்த புரிமலர்க் குஞ்சி தாழப் பொன்னகர் புகழப் புக்கான். | (இ - ள்.) சொரிமது கலந்த சோலை - பொழிகின்ற தேன் விரவிய பொழில்களையுடைய. சூரியபுரமது ஆளும் - சூரியபுரத்தை ஆளும் மரபினராகிய, அரிகுலத்து அரசர் கோமான் - அரி குலத்துட்டோன்றிய மன்னர்மன்னன், அவிர்மணி யாரம் தாங்கி - விளங்குகின்ற மணிவட மணிந்தவனாய், பொருமலைப் பகடு நுந்தி - போர்த்தொழில் புரியும் மலையை ஒத்த களிற்றி யானையை ஊர்ந்து, புயல் அலைத்து இருண்டு வீழ்ந்த புரிமலர் குஞ்சி தாழ - முகிலைத் தோற்கச் செய்வதாய் இருண்டு சரிந்த மலர் சூட்டப்பெற்ற தலைமயிர் தாழ்ந்து கிடப்ப, பொன்நகர் புகழப் புக்கான் - அழகிய நகரம் புகழும்படி சயமர மண்டபத்தே புகுந்தான் ; (எ - று.) | |
| (பாடம்) 1 னருமணி. | | |
|
|