பக்கம் : 1109
 

     (இ - ள்.) வஞ்சி அனையார் - வஞ்சிக் கொடியைப் போன்றவரும், மஞ்சு இவரும்
மாமயில் அனார் - முகில் வரவை அவாவுகின்ற சிறந்த மயில்போன்ற சாயலுடையாரும்,
அயில் பிடித்தார் - கைகளிலே வேற்படை பிடித்தவரும் ஆகிய உழைக்கல மகளிர்கள்,
கஞ்சுகமுகத்த முலை - மெய்ப்பையைத் தம் முகத்தேயுடைய முலைகளை, கச்சுமிக வீக்கி -
கச்சையால் விம்மக் கட்டியவராய், மணிதொடர்ந்த சுடர்ஞாணால் - நிரல் படக் கோத்த
ஒளிமிக்க மணிக்கோவையார், அம் சில இரும் குழல் - அழகிய சிலவாகப் பகுக்கப்பட்ட
கரிய கூந்தற் கற்றையை, அசைத்து - வரிந்து கட்டியவராய், மருங்கு சூழ்ந்தார் -
சோதிமாலையின் பக்கலிலே வந்து சூழ்வாராயினர், (எ - று.)

     அவ்வழி, வஞ்சிக் கொடிபோன்ற கஞ்சுக மகளிர் நாணால் குழல் கட்டி
அயில்பிடித்துக், கச்சுவீக்கி மயிலன்னார் சோதிமாலையின் மருங்கே சூழ்ந்தனர் என்க.

(665)

 
இதுவுமது
1796. ஆயமொடு தாயரிடை யாளரசர் 1தங்கள்
2நேயமிகு நெஞ்சினிடை யாளுமட வாளாய்ப்
பாயமதி தாரகையொ 3டோரைபட வேகித்
தூயமணி நீர்நிலைக 4டோறிவர்வ தொத்தாள்.
 
     (இ - ள்.) ஆயமொடு தாயர் இடையாள் மடவாள் - தன் தோழியரோடும் செவிலித்
தாயரின் சூழலிலே நிற்கின்ற சோதிமாலை, அரசர் தங்கள் நேயமிகு நெஞ்சின் இடையாளும்
ஆய் - மன்னவருடைய காதல்மிக்க நெஞ்சங்களின் ஊடேயும் இயங்குகின்றவளாய், பாயமதி
தாரகையொடு ஓரைபட ஏகி - ஒளிபரப்பிய முழுத்திங்கள் விண்மீன்களுடனே இராசியினூடே
சென்று, தூயமணி நீர்நிலைகள் தோறும் இவர்வது ஒத்தாள் தூயவாகிய தெளிந்த
நீர்நிலைகளினூடே இயங்குவதையும் ஒத்துத் தோன்றினாள், (எ - று.)

     ஆயங்களோடு தாயரிடை மண்டபத்தில் நிற்கின்ற சோதிமாலைக்கு, தாரகைகளோடு
இராசியிற் சென்ற திங்கள் உவமம், அத்திங்களின் நிழல் பூமியின் மேலுள்ள
நீர்நிலைகள்தோறும் தனித்தனி தோன்றி அந்நீரூடே இயங்குதல் அவள் உருவம்
ஆண்டுள்ள அரசர்தம் உளந்தோறும் தோன்றி ஆண்டு இயங்குதற்கு உவமம் எனக் காண்க.
இத்தகைய உவமையை வேறு இலக்கியங்களிலே காண்டல் அரிதென்க.
மகளிர்திரளுக்கு விண்மீன்றிரளும் மண்டபத்திற்கு இராசியும் மன்னர் நெஞ்சங்கள்
நீர்நிலைகட்கும் உவமைகள் என்க.

(666)

 


     (பாடம்) தங்கண். 2 மேயமிகு சிந்தையிடை. 3 டோரை மிக,

     4 ளோடிவர்வ.