பக்கம் : 1112
 

     மங்கைமார் பொன்னே! கொம்பே! ஆரணங்கே! போற்றி! போற்றி!!, அன்னே!
குலவிளக்கே! அமிர்தே! போற்றி! இடைநோம்! மென்மெல ஒதுங்கென்று போற்றிசைப்பச்
சோதிமாலை மண்டபத்தே புக்காள் என்க.

(669)

 

இதுவுமது

1800. அணிதயங்கு சோபான வீதிவா
     யணங்கனையா ரடியீ டேத்த
மணிதயங்கு மாளிகைமேல் வாணிலா
     வளர்முன்றின் மருங்கு சூழ்ந்து,
கணிதயங்கு வினைநவின்ற 1கண்டத்துத்
     திரைமகளிர் கையி 2னீக்கத்,
துணிதயங்கு வேலரசர் மனந்துளங்கச்
     சுடர்ந்திலங்கித் தோன்றி னாளே.
 
     (இ - ள்.) அணிதயங்கு சோபான வீதிவாய் - அழகுற்றுத் திகழ்தலையுடைய
படிக்கட்டுகளின் வழியே, அணங்கு அனையார் - தெய்வமகளிர் போன்ற
உழைக்கலமகளிர்கள், அடியீடு ஏத்த - அவள் அடியிடுந்தோறும் இறைஞ்சிப் போற்றா
நிற்ப, மணிதயங்கு மாளிகைமேல் - மணிகள் சுடரும் மாளிகையின் மேலிடத்துள்ள, வாள்
நிலா வளர் முன்றின் - நிலவொளி மிகும் முற்றத்தே சென்று, மருங்குசூழ்ந்து - தன்
பக்கத்தே மொய்த்து, கணி தயங்கு வினைநவின்ற கண்டத்துத்திரை - நூல்வல்ல தொழிற்
புலவராலே திகழ்கின்ற வினைத்திற மமைய இயற்றப்பட்ட பல வண்ணத் திரைச்சீலயை,
மகளிர் கையின் நீக்க - மகளிர்கள் தம் கையாலே அகற்ற, துணி தயங்குவேல் அரசர்
மனந்துளங்க - துணிவுடைமை விளங்குதற்குக் காரணமான வேற்படையை உடைய
வேந்தர்களின் நெஞ்சம் கலங்க, சுடர்ந்து இலங்கித்  தோன்றினாள் - ஒளிவிட்டு 
விளங்கித் தோன்றா  நின்றாள்,  (எ - று.)

     கண்டத்திரை - பலவண்ணமுடைய திரைச்சீலை.

     சோதிமாலை சோபான வழியே அணங்கனையார் அடியீடேத்த மாளிகைமேல்
நிலாமுன்றில் சேர்ந்து கண்டத்திரையை மகளிர் நீக்க அரசர் மனந்துளங்கத் தோன்றினாள்
என்க.

(670)

 

     (பாடம்) 1கண்டத்திரை. 2னீக்கித்.