பக்கம் : 1116
 

      இவ்வுலகமனைத்தும், ஒரு குடைக்கீழ் - தனது ஒரே குடை நீழலிலே, உறங்கக்
காத்த - இனிதே உறங்கும்படி காவல் செய்த, பாழித்தோள் பரதன்பின் இவன் - வலிய
தோள்களையுடைய பரதமன்னன் மரபினனாவான் இம்மன்னவன், இவனால் நிலமடந்தை
பரிவு தீர்ந்தாள் - இவனது ஆட்சி நன்மையானே நிலமகள் இன்னல் தீர்ந்து இனிதின்
வைகுவாளாயினள், (எ - று,)

     தனது ஒரே தேரை அலைகடலின் நடுவே ஓட்டிப் பகைவர்கள் கொடுத்த பொற்றேர்
முதலியவற்றைத் திறையாகப் பெற்று அவர் முறைமுறை இறைஞ்ச உலகெலாம்
ஒருகுடைக்கீழ் உறங்கக் காத்த பரதசக்கரவர்த்தியின் வழித்தோன்றல் இவனெனக் குல
நன்மை கூறினாள், என்க.

 (674)
 
 

குருகுலக் கோமகன் மாண்பு

1805. இன்னவன துயர்குலமு மிளமையுமிங்
     1கிவன்வடிவுஞ் சொல்ல வேண்டா
2மன்னவன்றன் மடமகளே 3மற்றிவனுக்
     கிடமருங்கின் மஞ்சஞ் சேர்ந்து
4பொன்னவிரு மணியணைமேற் 5பொழிகதிரீண்
     டெழுந்ததுபோற் பொலிந்து தோன்றுங்
கொன்னவின்ற வேற்குமரன் குருகுலத்தார்
     6கோனிவனே கூறக் கேளாய்.
 
     (இ - ள்.) இன்னவனது உயர்குலமும் இளமையும் இங்கு இவன் வடிவும்
சொல்லவேண்டா - இப்பரதன் மரபினனாகிய மன்னனுடைய உயர்ந்த குலப்பெருமையையும்,
இவன் இளமை நலத்தினையும் அழகின் சிறப்பையும் இவ்விடத்தே இனி யான் கூறிக்காட்ட
வேண்டா, மன்னவன்றன் மடமகளே - அரசன் மகளாகிய சோதிமாலாய், மற்றிவனுக்கு
இடமருங்கின் மஞ்சம் சேர்ந்து - இம்மன்னனுக்கு இடப்பாகத்தே இடப்பட்ட இருக்கையின்
மேலமைந்த,

     பொன் அவிரும் மணியணைமேல் - அழகு விரியும் மணிகளிழைத்த பஞ்சணையின்
மேலே, பொழிகதிர் ஈண்டு எழுந்ததுபோல் பொலிந்து தோன்றும் - பொழிகின்ற சுடருடைய
கதிரவனே இவ்விட,த்தே எழுந்தருளினாற் போன்று விளங்கித் தோன்றாநின்ற, கொல்
நவின்ற வேல்குமரன் - கொலைத்தொழிலமைந்த வேலையுடைய இளமன்னன், கூறக்கேளாய்
- யார் என யான் இயம்புவேன் கேள், இவனே குரு குலத்தார் கோன் - இவன்
குருமரபிற்றோன்றிய மன்னன் ஆவான், (எ - று.)
 

     (பாடம்) 1 மிவன் வடிவும். 2 மன்னன். 3 மற்றிவற், மற்றுமிவற்.

     4 பொன்னவிர். 5 பொழிகதிர். 6 கோனிவனைக்.