பக்கம் : 1126
 

     முரசு, மதில் புனல் பொறிபூ துறை என்னும் இவை மும்மூன்றாக உடையன் என்பதாம்.

     உண்டுறையுள் மழலையன்னம் விளையாடி, இளையவர்கள் நடை பயிலும்
உறந்தைக்கோமான்; முரசும், மதிலும், புனலும், பொறியும், பூவும், துறையும்
மும்மூன்றுடையான்; இச்சோழமன்னன் அழகையும் காணுதி என்றாள்; என்க.

(686)

 

ஏமாங்கதத்து இளமன்னன் மாண்பு

1817. தழலவாந் தாமரையி னீரிதழுஞ்
     செங்குவளைத் தாதும் வாரி
அழலவாஞ் செந்தோகை 1யலங்குபொலங்
     கதிர்ச்செந்நெ லலைத்த வாடை
பழனவாய்ப் பைங்கரும்பின் வெண்போது
     பவழக்காற் செம்பொன் மாடத்
தெழினிவாய்க் கொணர்ந்தசைக்கு 2மியலேமாங்
     கதநாட னிவனே 3கண்டாய்.
 
     (இ - ள்.) தழல் அவாம் தாமரையின் ஈர் இதழும் - தீப் பிழம்புபோன்று மலர்ந்த
தாமரையினது ஈரமுடைய இதழ்களையும், செங்குவளைத் தாதும் வாரி - செங்கழுநீர்
மலர்க்கண் உள்ள பூந்துகள்களையும் அள்ளிக்கொண்டு, அழல் அவாம் செந்தோகை
அலங்குபொலங் கதிர்ச் செந்நெல் அலைத்த வாடை - தீச்சுடர் போன்ற செவ்விய
தோடுகளையுடைய அசைகின்ற பொன்னிறமமைந்த கதிரையுடைய செவ்விய நெற்பயிரை
வருத்தா நின்ற வாடைக்காற்று, பழனவாய்ப் பைங்கரும்பின் வெண்போது - வயல்களிடத்தே
உள்ள பசிய கரும்பினுடைய வெண்மை நிறம் பொருந்திய மலர்களை, செம்பொன் மாடத்து
- செம்பொன்னாலியன்ற மேனிலை மாடத்தின்கண் கட்டப்பட்ட, எழினிவாய்க் கொணர்ந்து
அசைக்கும் - திரையின் மேல் கொண்டு வந்து வீசா நின்ற, இயல் ஏமாங்கத நாடன் இவன்
கண்டாய் - இயல்புடைய ஏமாங்கத நாட்டு மன்னன் இவன் காண், (எ - று.)

     இதழும், தாதும் வாரி அலைத்த வாடை கரும்பின் வெண்மலரினை மாடத்து
எழினிவாய்க் கொணர்ந்து அசைக்கும், ஏமாங்கத நாட்டு மன்னன் இவன் என்றான், என்க.

(687)

 

     (பாடம்) 1யலங்கலங். 2மேமாங். 3காணாய்.