பக்கம் : 1127
 

கலிங்கமன்னனும் மகதமன்னனும்

1818. காந்தளங்கட் கமழ்குலையாற் 1களிவண்டு
     களிறகற்றுங் கலிங்க நாடன்,
பூந்தளவங் கமழ்சாரற் பொன்னறைசூழ்
     தண்சிலம்ப னன்றே பொன்னே,
ஏந்திளஞ்சிங் காதனத்தி னினிதிருந்த
     விளவரச னிப்பா லானோன்,
மாந்தளிர்கண் மருங்கணிந்த மணியருவிக்
     குன்றுடைய மகதைக் கோவே.
 
     (இ - ள்.) கள் கமழ் காந்தளம் குலையால் - தேன்மணக்கும் காந்தளின் அழகிய
பூங்கொத்தாலே, களிறு களிவண்டு அகற்றும் - யானைகள் தம்மேல் மொய்க்கின்ற
களிப்பையுடைய வண்டுகளை ஓச்சா நிற்கும், கலிங்க நாடன் - கலிங்க நாட்டரசனும்,
பூந்தளவம் கமழ் சாரல் பொன்னறை சூழ் தண் சிலம்பன் - அழகிய முல்லை மணக்கும்
தாழ்வரைகளையும் உச்சியினையும் உடைய குளிர்ந்த மலைகளை யுடையவனும் ஆவான்,
பொன்னே - திருமகள் போல்வாளே!, ஏந்திளம் சிங்காதனத்தின் இனிது இருந்த இளவரசன்
- இளைய அரிமாச் சுமந்த அணையிடத்தே இனிதாக வீற்றிருந்த இவ்விள மன்னன்,
இப்பால் ஆனோன் - அம்மன்னனுக்கு இப்புறத்தே அமர்ந்திருக்கின்ற அரசன்,
மாந்தளிர்கள் மருங்கு அணிந்த - மாமரத்தினது தளிர்களை அணிந்துள்ள
பக்கங்களையுடைய, மணியருவி - நீல மணி போன்ற நிறமுடைய அருவிகள் பாய்கின்ற,
குன்று உடைய மகதைக் கோமான் - மலைகளையுடைய மகதநாட்டு மன்னன் ஆவான்,
(எ - று.)

     சிங்காதனத்தில் இனிதிருந்த இளவரசன் தளவங் கமழ்சாரால் சிலம்பன் கலிங்கநாடன்
ஆவன், இப்பாலானோன் குன்றுடைய மகத மன்னன் என்றாள், என்க.

(688)

 

வேறுபல மன்னர்கள்

1819. அங்கநா டுடையவர்கோ னவ்விருந்தா
     னிவ்விருந்தா னவந்திக் கோமான்,
கொங்குவார் பொழிலணிந்த கோசலத்தார்
     கோமானிக் குவளை வண்ணன்,
கங்கைதா னிருகரையுங் கதிர்மணியும்
     பசும்பொன்னுங் கலந்து சிந்தி
வங்கவாய்த் திரையலைக்கும் வளநாட
     2னிவன்போலும் வைவேற் காளை.
 

     (பாடம்) 1களிவண்டுங். 2னவன் போலும்.