பக்கம் : 113
 
அந்த வித்தியாதர அரசன்; ஒற்றை அம் தனிக்கோல் - ஒப்பற்ற அழகிய தனிமையான
தனது செங்கோலினால்; உலகு ஓம்பும்நாள் - உலகத்தைப் பாதுகாக்குங்காலத்தில்; குற்றம்
ஆயது ஒன்று உண்டு - அவனிடத்திலே ஒரு குற்றம் உள்ளது அதுயாதெனில்;
குணங்களால் அற்ற - நற்குணங்களில்லாத; கீழ் உயிர்மேல் அருளாமையே -
சிறுமையையுடைய உயிர்களிடத்திலே அருள் செய்யாமை யாம், (எ - று.)

     கீழ்உயிர் என்றது கீழ்மக்களும் கொடியவிலங்குகளும் ஆம். இதனால்,
சுவலனசடியின்மேல் போலிக் குற்றம் ஒன்றினைக் கற்பித்து அவனுடைய நல்லியல்புகளை
விளக்கினார். எல்லாவுயிர்கண் மாட்டுஞ் செய்யற்பாலதாகிய அருளை, நற்குணங்கள் அற்ற
கீழ்மக்களிடத்திலே சுவலனசடி செய்யாமை யாகிய குற்றம் ஒன்று உளது என்பதாம்.
இத்தகைய பழிப்பினால் மன்னவனுடைய பெருமை விளக்கப்பட்டது. இதனை வஞ்சப்
புகழ்ச்சியணி என்பர். முதலடி முற்றுமோனை.
 

( 22 )

அவ்வரசன் ஆட்சியில் நடுங்கியன

141. செம்பொ னீண்முடி யான்செரு வின்றலை
வெம்பு வேலவன் விஞ்சையர் மண்டிலம்
நம்பி யாள்கின்ற 1நாளி னடுங்கின
கம்ப மாடக் கதலிகை போலுமே.
 

     (இ - ள்.) செம்பொன் நீள் முடியான் - சிவந்த பொன்னினால் ஆகிய நீண்ட
முடியையுடையவனும்; செருவின் தலை வெம்பு வேலவன் - போரினிடத்திலே சினக்கின்ற
வேற்படையை யுடையவனுமாகிய அந்தச் சுவலனசடி மன்னன்; விஞ்சையர் மண்டிலம் நம்பி
ஆள்கின்ற நாளில் - வித்தியாதர உலகத்தை விரும்பி அரசாட்சி செய்கின்ற காலத்திலே;
நடுங்கின - நடுங்கியவைகள்; கம்பம் மாடம் கதலிகைபோலும் - தூண்கள் பொருந்திய
மாளிகைகளின்மேல் நாட்டப்பெற்ற கொடிகளேயாம், (எ - று.)

     வெற்றிக்கு அறிகுறியாக மாடமாளிகைகளின்மேல் நாட்டிய துகிற்கொடிகள் காற்று
வீசுதலால் அசையுமே யல்லாமல், அவன் அரசாளும் நாட்டில் துன்பத்தால் உள்ளமும்
உடலும் நடுங்கும் உயிர்கள் எவையும் இல்லையென்பதாம். இவ்வாறு பிற ஆசிரியர்களும்
கூறுதலை “அடிமிசை முறையிட்டென்றும் அரற்றுவ சிலம்பே“

 


     (பாடம்) 1. நாளும் நடுங்கின; நள்ள நடுங்கின. சூ. 8