பக்கம் : 1130
 

     பிறவாற்றால் தேவர்கட்கும் இவர்க்கும் வேற்றுமையின்றாம் என்றபடி, தேவர்கள்
கண்ணிமையார், இவ்விச்சாதரர் கண்ணிமைப்பர்; இஃதொன்றே வேற்றுமையன்றிப் பிறிதொரு
வேற்றுமையில்லை என்றாள் என்க.

(691)

 
சோதிமாலையின் கண்கள் அமிததேசன் அழகில் வீழ்தல்
1822. 1அங்கவவர் வளநகருங் குலவரவு
     2மவயவமு மறையும் போழ்தின்
வெங்கதிரோன் 3பெயரவனுக் கிளவரசிவ்
     வேந்தனெனா முன்னந் தானே
கொங்கிவருங் கருங்குழலி பெருந்தடங்க
     ணிருங்குவளை பிணையல் போலச்
செங்கதிரோ னெனவிருந்த திருந்துவே.
     லிளையவன்மேற் றிளைத்த வன்றே.
 
     (இ - ள்.) அங்கு அவவர் - அவ்விடத்தே அந்த அந்த அரசர்களுடைய, வளநகரும்
- வளநகரையும், குலவரவும் - மரபு வரலாற்றையும், அவயவமும் - உறுப்பின்
நலங்களையும், அறையும் போழ்தில் - தோழி கூறிவருகின்ற அமயத்தே, இவ்வேந்தன் -
இவ்வரசன், வெங்கதிரோன் பெயரவனுக்கு இளவரசு எனாமுன்னம் - அருக்க கீர்த்தியின்
மகனாகிய அமிததேசன் என்னும் இளவரசன் என்று தோழி இயம்புதற்கு முற்பட்டே,
கொங்கு இவரும் கருங்குழலி பெருந்தடம் கண் - மணம் கமழ்கின்ற கரிய கூந்தலையுடைய
சோதிமாலையின் மிகப் பெரிய கண்கள், செங்கதிரோன் என இருந்த - செவ்விய ஞாயிற்று
மண்டிலம் இருந்தது போலே வீற்றிருந்த, திருந்துவேல் இளையவன் மேல் - திருத்தப்பட்ட வேற்படையேந்திய அமிததேசன் தோள்களின் மேலே, இருங்குவளை பிணையல்போல -
கரிய நீலோற்பல மாலையிட்டாற் போன்று, திளைத்த அன்றே - பொருந்தின, அன்றே:
அசை, (எ - று.)

     தோழி அவ்விச்சாதரர் வரலாற்றைக் கூறிவரும் அமயத்தே அவர்களுள் வீற்றிருந்த
அமிததேசனை இவன் இன்னன் என்று எடுத்தியம்பு முன்னரே சோதிமாலையின் கண்கள்
நீலோற்பல மாலைபோலே அமிததேசன் தோள்களிலே வீழ்ந்தன என்க. கண்கள்
நீலோற்பலம் போலுதலின் நீலோற்பலப் பிணையல் என்றார். சுயம்வரத்தே மாலை சூட்டும்
மரபிற்கேற்பக் கூறினர் என்க.

(692)

 

     (பாடம்) 1 அங்கவர். 2 மவையவற் றோடறையும். 3பெயரனுக், பேரனுக்.