பக்கம் : 1132 | | பாடு - முயற்சி. அத்தனை மன்னரிடத்தும் செல்லாத சோதிமாலையின் மனம் அமிததேசன்பாற் சேர்ந்தமைக்கு ஊழே காரணம் என்றபடி. தோழி, அச்சுயம்வரத்திற் காட்டும் மரபுகருதிக் காட்டிய துணையே யல்லால், இவள் காட்டுக் காரணமன்று, அமிததேசனைச் சோதிமாலை விரும்பியதற்கு ஊழே காரணமாம். உலகில் நிகழும் எந்நிகழ்ச்சியும் ஊழினால் நிகழ்வனவன்றி, ஊழில்லாதவழி எத்துணை முயன்றும் என்னாம் என்று தேவர் கூறினார் என்க. | (694) | | சோதிமாலை அமிததேசன் தோளில் மாலைசூட்டல் | 1825. | விண்டழி நிறைய ளாகி மெல்லவே நடுங்கி நாணி வண்டிவர் மாலை நோக்கி மாதராள் மறைத லோடும் கொண்டதோர் 1குமரன் போல்வான் குங்குமக் குவவுத் தோண்மேல் ஒண்டொடி மாலை வீழ்த்தா ளுலகொலி படைத்த தன்றே. | (இ - ள்.) விண்டு அழி நிறையள் ஆகி - தன்னைவிட்டு நீங்கி அழிந்துபோன நிறையை உடையளாய், மெல்லவே நடுங்கி - உடல் பைய நடுங்கா நிற்ப, நாணி - வெட்கமுற்று, வண்டிவர் மாலை நோக்கி - வண்டுகள் மொய்க்கின்ற தன் கையிலுள்ள மாலையைப் பார்த்து, மாதராள் மறைதலோடும் - சோதி மாலை தன் தோழியின் புறத்தே நாணத்தால் மறைந்தவளாய், கொண்டதோர் - தன் உளத்தைக் கவர்ந்துகொண்ட - குமரன் போல்வான் - முருகன் போன்ற அமித தேசனுடைய, குங்குமக் குவவுத் தோள்மேல் - குங்குமக்குழம்பு நீவிய திரண்ட தோளின் மிசை, ஒண்டொடி - சோதிமாலை, மாலை வீழ்த்தாள் - மாலையைச் சூட்டினாள், உலகு ஒலி படைத்தது - அப்பொழுது உலகம் முழுதும் மங்கல இசையால் நிரம்பிற்று, (எ - று.) | |
| (பாடம்) 1 குமரன் போலக் குங்கும. | | |
|
|