பக்கம் : 1133
 

     சோதிமாலை நிறையழிந்தவளாய் நடுங்கி நாணித் தன் கையிலுள்ள மாலையை
நோக்கித் தோழியின் புறத்தே மறைந்தவளாய்க் குமரன்போல்வான் தோள் மேல் வீழ்த்தாள்
உலகு ஒலிபடைத்தது என்க.

(695)

 

ஏனைய அரசர்களின் மனநிலை

1826. ஆர்த்ததங் கரவத் தானை
     யாலித்த முரசுஞ் சங்கும்
தேர்த்தன மலருஞ் செம்பொற்
     சுண்ணமுந் திசைக ளெல்லாம்
போர்த்தன பதாகை பொங்கிப்
     பூமியங் கிழவ ருள்ளம்
வேர்த்தன வேர்த்துத் தாமே
     வெய்துயிர்த் தொழிந்த வன்றே.
 
     (இ - ள்.) ஆர்த்தது அங்கு அரவத்தானை - அவ்விடத்தே ஒலியுடைய படைகள்
மிகவும் முழங்கின, முரசும் சங்கும் ஆலித்த - முரசுகளும் சங்கங்களும் முழங்கின,
செம்பொற் சுண்ணமும் மலரும் - செவ்விய பொற் பொடிகளும் மலர்களும், தேர்த்தன -
தேங்கின, பதாகை பொங்கி திசைகள் எல்லாம் போர்த்தன - கொடிகள் மிக்குத் திக்குகளை
மறைத்தன, பூமியங் கிழவர் உள்ளம் - அரசருடைய நெஞ்சுகள், வேர்த்தன- வியர்த்தன.
வேர்த்துத் தாமே வெய்துயிர்த்து ஒழிந்த அன்றே - தம்முள்ளேயே புழுங்கி வியர்த்து
நெடுமூச்செறிந்து அழிந்தன, (எ - று.)

     மனம் வியர்த்தல் - மனம் புழுங்குதல், “பொள்ளென வாங்கே புறம் வேரார், காலம்
பார்த்து உள்வேர்ப்பர்,Ó என்பதனானும் அறிக.

     அவ்வழி தானை ஆர்த்தன முரசமுதலியன முழங்கின. மலரும் சுண்ணமும் தேங்கின,
அரசருள்ளம் வேர்த்துத் தாமே வெய்துயிர்த்து ஒழிந்த என்க.

(696)

 

அம்மன்னர்கள் ஆறுதல் எய்துதல்

1827. புனைவுதா னிகந்த கோதைப் பொன்னனாள் பூமி பாலர்
நினைவுதா னிகந்து காளை வடிவெனு நிகளஞ் சேர
வினைகடாம் விளையு 1மாறியாம் வேண்டிய வாறு வாரா
வினையதால் வினையின் றன்மை யெனநினைந் தாறி னாரே.
 
     சில பிரதிகளில் இச்செய்யுளில்லை.
 

     (பாடம்) 1 மாறு.