பக்கம் : 1134 | | (இ - ள்.) புனைவுதான் இகந்த கோதை - புனைந்து கூற வொண்ணாத பேரழகு படைத்த மலர்மாலை யணிந்த, பொன் அனாள் - திருமகளை ஒத்த சோதிமாலை, பூமிபாலர் நினைவு தான் இகந்து - மன்னர்களுடைய எண்ணத்தினின்றும் விலகி, காளை வடிவெனும் - அமித தேசனுடைய அழகு என்னும், நிகளம் சேர - தளையிலே சிக்கா நிற்ப, வினைகள் தாம் விளையுமாறு - ஊழ்வினைகள் தாம் வேண்டியவாறே விளைவனவன்றி, யாம் வேண்டியவாறு வாரா - யாம் விரும்பியபடி விளைவனவல்ல, வினையின் தன்மை இனையதால் - ஊழினது முறைமை இத்தன்மைத்து, என நினைந்து - என்று ஆராய்ந்து தெளிந்து, ஆறினார் - மனம் ஆறுதல் எய்தினார், (எ - று.) விளைவனவன்றி என வருவித்துக்கொள்க. சோதிமாலை மன்னருடைய நினைவினைக் கடந்தவளாய்ச் சென்று அமிததேசன் அழகினிற் சிக்கினாளாக, பூமி பாலர் ஊழினை எண்ணி மெல்ல மெல்ல மனம் ஆறுத லடைந்தனர் என்க. வினைகள், தாம் விளையுமாறு விளைவன, யாம்வேண்டியவாறு வாரா என்க, “தீதும் நன்றும் பிறர்தர வாரா“ என்றார் பிறரும். | (697) | | சோதிமாலைக்கும் அமிததேசனுக்கும் திருமணம் நிகழ்த்தல் | 1828. | நெய்த்தலைப் பாலுங் காங்கு நெடுவரை யுலகின் வந்த மைத்துன குமரன் றன்னை மடமொழி மாலை 1சூட்ட இத்தலை 2யரசர் கோமா னெரிகதி ராழி வேந்தன் கைத்தலை வேலி னாற்குக் கடிவினை முடிவித் தானே. | (இ - ள்.) நெய்த்தலைப் பால் உக்கு ஆங்கு - நெய்யின்கண் பால் பொழியப்பட்டாற் போன்று, நெடுவரை உலகின் வந்த - நீண்ட மலையுலகாகிய இரத நூபுரத்தினின்றும் வந்த, மைத்துன குமரன்றன்னை - தன் மைத்துனனாகிய அமித தேசனை, மடமொழி - சோதிமாலை, மாலை சூட்ட - இவ்வண்ணம் மணமாலை சூட்டா நிற்ப, இத்தலை - இவ்விடத்தே, அரசர் கோமான் - மன்னர் மன்னனாகிய, எரிகதிர் ஆழி வேந்தன்- விளங்கிய சுடர் உடைய சக்கரப் படையையுடைய திவிட்ட மன்னன், கைத்தலை வேலினாற்கு - கையிடத்தே வேற்படையையுடைய அமித தேசனுக்கு, கடிவினை முடிவித்தான் ஏ - திருமண வினையை எஞ்சாது நிகழ்த்தி முடித்தான், (எ - று.) | |
| (பாடம்) 1 சூட்டி. 2 யென்னசெய்தான். | | |
|
|