பக்கம் : 1137
 

     வீரக்கழலை யணிந்த தேவர்கள், படைத்த - கடல்கடைந்து உண்டாக்கிய, நீர்
அமிர்தப்புள்ளி - நீர்மையையுடைய அமிழ்தத்துளி, அங்கெழு மதியம் தன் மேல் -
அப்பாற்கடலிலே தோன்றிய திங்கள் மண்டிலத்திலே தெறித்து, அரும்பி யாங்கு -
முகிழ்த்தாற் போன்று, அணிந்த அன்றே - அவள் முகத்தை அழகு செய்தன, (எ - று.)

     தையல் காளையோடும் அழல் வலம் செய்த பொழுது குழைமுகம் பொறித்த
வியர்வைப்புள்ளி, திங்கள் மண்டிலத்தே முகிழ்த்த அமிழ்தப் புள்ளிபோலே அவள்
முகத்தை அழகுறுத்தின. என்க.

(701)

 

அருக்ககீர்த்தி தன் மகள் சுதாரைக்குச் சுயம்வரம்
தொடங்கல்

1832. மன்னவ குமரனாங்கு மடந்தையைப் புணர்ந்து மாடத்
தின்னகி லமளி மேலா லிளமுலைத் தடத்து மூழ்க
அன்னவன் றாதை செங்கோ லாணைவே லருக்க கீர்த்தி
தன்னமர் மடந்தைக் கேற்ற சயமர மறைவித் தானே.
 
     (இ - ள்.) மன்னவ குமரன் ஆங்கு - அரசன் மகனாகிய அமித தேசன் அவ்வாறு,
மடந்தையைப் புணர்ந்து - சோதி மாலையை வேட்டு, மாடத்து - மேனிலை மாடத்தின்கண்,
இன் அகில் அமளி மேலால் - இனிய அகில் மணங்கமழும் கட்டிலின் மேலே,
இளமுலைத்தடத்து மூழ்க - சோதிமாலையின் இளமைமிக்க முலைப்போகம் என்னும் நீர்
நிலையிலே முழுகா நிற்ப, அன்னவன் தாதை - அவ்வமித தேசனுடைய தந்தையாகிய,
செங்கோல் ஆணைவேல் அருக்க கீர்த்தி - செங்கோல் முறை வழாது ஆணை செலுத்தும்
வேற்படையையுடைய அருக்க கீர்த்தி, தன் அமர் மடந்தைக்கு ஏற்ற - தனது அன்பிற்குரிய
சுதாரை என்னும் மகளுக்குப் பொருந்திய, சயமரம் அறைவித்தான் - சுயம்வரச் செய்தியை
முரசறைந்து அறிவிப்பானாயினன், (எ - று.)

     அமிததேசன் சோதிமாலையை மணந்து மாடத்தே காமவின்பம் நுகர்ந்திருக்கலானான். அப்பால் அருக்க கீர்த்தி தன் மகளாகிய சுதாரைக்குச் சுயம்வரம் என்று முரசறைவித்தான் என்க.

(702)

 
சுதாரைக்குத் தோழி அரசர் வரலாறு கூறுதல்
1833. சயமர மறைந்த நன்னாட்
     டமனிய மஞ்சம் பாவி
இயமரந் துவைப்ப வேறி
     யிகன்மன்ன ரிருந்த போழ்தில்
பயமலை மன்னன் பாவைக்
     கவரவர் பண்பு கூறிக்
கயமலர் நெடுங்க ணாளோர்
     காரிகை காட்டி னாளே.